தமிழ்நாடு
நெல்லை: ' பஸ்ஸை நிறுத்திட்டாங்க' -போக்குவரத்துக் கழகத்தின் செயலால் தவிக்கும் பழங்குடிகள்
நெல்லை: ' பஸ்ஸை நிறுத்திட்டாங்க' -போக்குவரத்துக் கழகத்தின் செயலால் தவிக்கும் பழங்குடிகள்
கொதித்துப் போன பழங்குடியின மக்கள் திடீர் பஸ் மறியலில் இறங்கி பரபரப்பை எற்படுத்தியிருக்கிறார்கள்.
பழங்குடியின மக்கள் வசிக்கும் மலைக்கிராமத்திற்கு செல்லும் பேருந்துகளை திடீரென நிறுத்தியதால் அங்குள்ள மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நெல்லை மாவட்டம், பாபநாசம் மலையில் காணியின பழங்குடி மக்கள் 100க்கும் அதிகமானோர் வசிக்கிறார்கள். அவர்கள் மீது நெல்லை முன்னாள் மாவட்ட ஆட்சியர் விஷ்ணுவிற்கு தனி பாசம் உண்டு. அவர்களுக்காக காட்டிலேயே 10 முதல் 15 ஏக்கர் நிலம் இலவசமாக கொடுத்திருக்கிறார். அதில் கிடைக்கும் தேன், பலா, வாழை, ஆகியவற்றை தினமும் கீழே கொண்டு வந்து விற்பதற்கு வசதியும் செய்து கொடுத்தார்.
காணிகள் குடிசைகளுக்கு மின்சாரம் வழங்கப்பட்டிருக்கிறது. தனி ரேசன் கடை அமைக்க முயற்சிகள் செய்யும் போது அவர் மாற்றப்பட்டார். காணியின மக்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்காக நம்பி இருப்பது பாபநாசம், வி.கே.புரம், அம்பாசமுத்திரம் ஆகிய ஊர்களைத்தான். தினமும் காட்டில் விளையும் பொருட்களை அரசு பஸ்களில் கீழே கொண்டு வந்து விற்று விட்டு அதே பஸ்ஸில் திரும்புவது வழக்கம். தற்போது அந்த பஸ்கள் நிறுத்தப்பட்டு விட்டதால் கொதித்துப் போன பழங்குடியின மக்கள் திடீர் பஸ் மறியலில் இறங்கி பரபரப்பை எற்படுத்தியிருக்கிறார்கள்.
இது குறித்து காணி பழங்குடியினத்தைச் சேர்ந்த சாவித்திரி என்கிற பெண் கூறுகையில், ’’எங்கள் விவசாயப் பொருட்களை மலையில் விற்க முடியாது. நிச்சயம் மலையை விட்டு கீழே இறங்கித்தான் ஆக வேண்டும். தவிர, கல்லூரி படிப்பிற்காக பாபநாசம் வந்தே தீர வேண்டும். இதற்காக அம்பாசமுத்திரம், மணிமுத்தாறு பகுதிகளிலிருந்து தினமும் ஆறு பஸ்கள் பாபநாசம் அணை வரை சென்று திரும்பி வந்தன. சேர்வலாறு பகுதியில் ஒரு பஸ் இரவில் தங்கி விடும். காலையில் பள்ளி கல்லூரிக்குச் செல்பவர்கள், விவசாய பொருட்களை விற்பனை செய்கிறவர்களுக்கு எளிதாய் இருந்தது.
தற்போது இரவு தங்கும் பஸ் நிறுத்தப்பட்டு விட்டது. மீதி ஐந்து பஸ்களும் பகல் ஒரு மணியோடு கீழே இறங்கி விடும். அதற்கு மேல் எங்களால் எங்கும் போக முடியாது. பள்ளி, கல்லூரி சென்று வருபவர்களும் வர முடியவில்லை. எனவே இது குறித்து கலெக்டரிம் மனு கொடுத்தோம். அவர் நடவடிக்கை எடுப்பதாகக் கூறியிருக்கிறார். கலெக்டரிடம் மனு கொடுத்தது பற்றி பாபநாசம் டெப்போ மேலாளரை சந்தித்து பேச முடிவு செய்தோம். அவர் வரத் தாமதமானதால் டெப்போ முன் மறியல் செய்தோம்’’என்றார். இதனைத் தொடர்ந்து போக்குவரத்து அதிகாரிகள் அவர்களிடம் பஸ் விடுவதற்கு ஏற்பாடு செய்கிறோம் என்று உறுதியளித்ததன் பேரில் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.