கேரளாவில் 8 வயது சிறுமி செல்போன் வெடித்து பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவில் 8 வயது சிறுமி, வீடியோ பார்த்துக்கொண்டிருந்தபோது திடீரென செல்போன் வெடித்து பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முழுவதுமே செல்போன் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குழந்தைகள் பேசத் தொடங்குவதற்கு முன்பே செல்போன்களை பார்க்கத் தொடங்கி விடுகின்றனர். செல்போன்கள் அதிநவீன வசதிகள் அதிகரிப்பது ஒருபுறம் இருக்க, செல்போன்களால் ஏற்படும் விபத்துகளும் தொடர்கதையாகி வருகின்றன.
கேரளா மாநிலம், திருச்சூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் அசோக்குமார்-செளமியா தம்பதி.இவர்களுக்கு ஆதித்யா என்ற 8 வயது மகளும் உள்ளார்.
தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வரும் ஆதித்யா. தினம்தோறும் கூடுதலாக செல்போனில் வீடியோ பார்ப்பது வழக்கமாக கொண்டுள்ளார். இந்த நிலையில், நேற்றிரவு சிறுமி வழக்கம்போல் செல்போனை பார்த்துக்கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக திடீரென சிறுமி ஆதித்யா கையில் வைத்திருந்த செல்போன் வெடித்துச் சிதறியது. திடீரென பயங்கர சத்தம் கேட்டு பெற்றோர் வந்து பார்த்தபோது, தீக்காயங்களுடன் ஆதித்யா இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக கூறினர். இதனால் துக்கம் தாங்காமல் பெற்றோர் அழுதது அவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.
இதுகுறித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அங்கு ஆய்வு செய்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் செல்போன் எப்படி வெடித்தது? என்ன காரணம் ? உள்ளிட்டவை குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் செல்போனை ஆய்வுக்கு எடுத்து சென்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
செல்போன் வெடித்ததில் 8 வயது சிறுமி பலியான சம்பவத்தைத் தொடர்ந்து குழந்தைகளிடம் அதிக நேரம் செல்போனை கொடுக்க வேண்டாம் என போலீஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.