ஜி-ஸ்கொயர் விவகாரம்: தி.மு.க எம்.எல்.ஏ. வீட்டில் இரண்டாவது நாளாகத் தொடரும் ஐ.டி சோதனை
சென்னை, ஹைதராபாத், மைசூரு, உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்
ஜி-ஸ்கொயர் நிறுவனத்திற்குச் சொந்தமான சென்னை நுங்கம்பாக்கம், ஆழ்வார்பேட்டை, சேத்துப்பட்டு உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித்துறையினர் இரண்டாவது நாளாக இன்றும் சோதனை நடத்தி வருகின்றனர்.
ஜி-ஸ்கொயர் நிறுவனம் தொடங்கப்பட்ட முதல் ஆண்டில் 56 கோடி ரூபாய் வருமானம் ஈட்டியதாகவும், தற்போது, தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு, ஆண்டு வருமானம் 35 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்ந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. மேலும், வரி ஏய்ப்புச் செய்ததாக வந்த தகவலின் அடிப்படையில் வருமானவரித்துறையினர் நேற்று காலை முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ஜி-ஸ்கொயர் அலுவலகத்திலும், சென்னை நீலாங்கரையில் உள்ள அந்நிறுவன இயக்குநர் பாலா வீட்டிலும், சென்னை கிழக்கு கடற்கரை சாலை அக்கரையில் உள்ள பாலாவின் உறவினர்கள் வீட்டிலும் சோதனை நடக்கிறது.
இதேபோல், ஜி-ஸ்கொயர் நிறுவனத்தின் முக்கியப் பொறுப்பில் உள்ள ஆதவ் அர்ஜூன், சுதிர், பிரவின், அண்ணா நகர் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் மோகன் மற்றும் அவரது மகன் கார்த்தி ஆகியோரது நிறுவனங்கள் மற்றும் வீடுகளில் இன்றும் சோதனை நடைபெற்று வருகிறது. சென்னை, ஹைதராபாத், மைசூரு, உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் வருமான வரித்துறையினர் தொடர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
வருமான வரித்துறையினர் தொடர் சோதனையில் ஈடுபட்டு வரும் இடங்களில் துப்பாக்கி ஏந்திய மத்திய தொழில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.