அரியலூர்: 11 வருடங்களுக்கு முன் திருடுபோன ஐம்பொன் ஆஞ்சநேயர் சிலை- ஆஸ்திரேலியாவில் மீட்கப்பட்டது எப்படி?

அரியலூர்: 11 வருடங்களுக்கு முன் திருடுபோன ஐம்பொன் ஆஞ்சநேயர் சிலை- ஆஸ்திரேலியாவில் மீட்கப்பட்டது எப்படி?
அரியலூர்: 11 வருடங்களுக்கு முன் திருடுபோன ஐம்பொன் ஆஞ்சநேயர் சிலை- ஆஸ்திரேலியாவில்  மீட்கப்பட்டது எப்படி?

ஆஞ்சநேயர் சிலை 11 வருடங்களுக்குப் பின்னர் கிடைத்தது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

11 வருடங்களுக்கு முன்பு திருடுபோன ஐம்பொன் ஆஞ்சநேயர் சிலை ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்கப்பட்டது எப்படி? என்கிற தகவல் விசாரணையில் வெட்ட வெளிச்சமாகி இருக்கிறது. 
அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே வெள்ளூர் கிராமத்தில் வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் உள்ள வரதராஜ பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி, மற்றும் ஆஞ்சநேயர் ஐம்பொன் சிலைகள் கடந்த 2011ம் வருடம் சிலை திருடர்களால் திருடுபோனது. இது தொடர்பாக செந்துறை போலீசிலும் புகார் செய்யப்பட்டு வழக்கும் பதிவு செய்யப்பட்டது. 2020ம் ஆண்டு காவல்துறை இயக்குனர் உத்தரவின் பேரில் இந்த வழக்கு சிலைத் திருட்டு தடுப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டது. 
சிலைத் திருட்டு தடுப்பு பிரிவு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதில், வரதராஜ பெருமாள் கோவிலில் திருடுபோன ஆஞ்சநேயர் சிலை மட்டும் அமெரிக்காவில் உள்ள நியூயார்க் கிறிஸ்டி அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டு அங்கிருந்து அது ஏலம் விடப்பட்டிருப்பது தெரியவந்தது. 
தொடர் விசாரணையில் அந்தச் சிலை ஆஸ்திரேலியாவில் வசித்து வரும் அமெரிக்கர் ஒருவருக்கு ஏலம் விடப்பட்டு விற்பனை செய்யப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த சிலையை மீட்க காவல்துறை தலைமை இயக்குனர் மூலம் மத்திய அரசின் உள்துறைக்கு கடிதம் அனுப்பி ஆஸ்திரேலியா நாட்டு அரசுக்கும் அந்த சிலையை ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கும்படி அறிவுறுத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து சிலையை ஏலம் எடுத்த ஆஸ்திரேலிய நாட்டை சேர்ந்தவர் அங்கே உள்ள அமெரிக்க தூதரகம் மூலம் மேற்படி ஆஞ்சநேயர் சிலையை இந்திய தூதரகத்தில் ஒப்படைத்தார். அந்த சிலை பரிசோதனைக்குப் பின்னர் இந்திய தொல்லியல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. 
கடந்த 17ம்தேதி சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு டி.எஸ்.பி  பாலமுருகன் தலைமையிலான தனிப்படை போலீசார் டெல்லிச் சென்று சிலையைப் பெற்று சென்னை கொண்டு வந்தனர். இந்த சிலையை குடந்தை சிறப்பு நீதிமன்றத்தில் போலீசார் ஒப்படைத்தனர். இந்த சிலையை குடந்தை நாகேஸ்வரன் கோவிலில் உள்ள ஐம்பொன் சிலைகள் பாதுகாப்பு மையத்தில் வைக்க நீதிபதி உத்திரவிட்டார். ஆஞ்சநேயர் சிலை 11 வருடங்களுக்கு பின்னர் கிடைத்த சம்பவம் பக்தர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
-ஆர். விவேக் ஆனந்தன்.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com