மாவட்ட ஆட்சியரின் உத்தரவை அடுத்து காவல்துறையினர் சம்பந்தப்பட்ட நபரை கைது செய்தனர்
சாலையில் கிடக்கும் பழைய பேப்பர், பாட்டில்களை எடுத்து விற்பனை செய்து பிழைப்பு நடத்தி வரும் பழங்குடி இன பெண்ணின் பின்புறத்தில் ஒருவர் காலணியால் அடித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியான நிலையில் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உத்தரவின் பேரில் திமுக நிர்வாகியின் கணவர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அருகில் உள்ள குறிச்சி வடக்கு தெருவில் இரண்டு பெண்கள், இரண்டு சிறுமிகள் கை குழந்தைகளுடன் சாலையோரம் கிடக்கும் பழைய பாட்டில்கள், பேப்பர்கள் மற்றும் இரும்பு பொருட்களை எடுத்து அவற்றைக் கடையில் விற்பனை செய்வதற்காக எடுத்து சென்றுள்ளனர்.
அப்போது அங்கே வந்து அவர்களை தடுத்த பேராவூரணி வடக்கு ஒன்றிய மகளிர் அணி அமைப்பாளர் (திமுக) தீபலட்சுமியின் கணவர் சாமிநாதன். அந்தப் பெண்களைத் தரக்குறைவாகப் பேசியுள்ளார்.மேலும் அவர்கள் சேகரித்து வைத்திருந்த பேப்பர் மற்றும் பாட்டில்கள் மற்றும் பிளாஸ்டிக், இரும்பு ஆகிய பொருட்களை பறித்துத் தரையில் கொட்டினார்.
பின்னர் ஒரு பெண்ணின் பின்புறத்தில் காலணியால் அடிக்கிறார். இந்த காட்சி சமூக வலைதளங்களில் வைரல் ஆன நிலையில், மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், காவல் கண்காணிப்பாளர் ஆஷிஸ் ராவத்தைத் தொடர்பு கொண்டு பெண்ணைக் காலணியால் தாக்கியவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
இதனை அடுத்து, வாட்டாத்தி கோட்டை காவல்துறையினர் கிராம நிர்வாக அலுவலர் வாயிலாகத் தாக்குதலுக்கு ஆளான துறவிக்காடு எம்.ஜி.ஆர்.நகரில் வசித்து வரும் பழங்குடி இன பெண்ணை தேடிப்பிடித்துப் புகார் பெற்று வழக்கு பதிந்தனர்.
பின்னர் தலைமறைவாகி இருந்த தி.மு.க பெண் நிர்வாகியின் கணவர் சாமிநாதனை காவல்துறையினர் கைது செய்தனர். தாமாக முன்வந்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட மாவட்ட ஆட்சியருக்கு சமூக ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.