திருச்சி:கை எடுத்து கும்பிட்ட பிரபு-பதில் சொல்லாமல் போன கே.என்.நேரு

திருச்சி:கை எடுத்து கும்பிட்ட பிரபு-பதில் சொல்லாமல் போன கே.என்.நேரு
திருச்சி:கை எடுத்து கும்பிட்ட பிரபு-பதில் சொல்லாமல் போன கே.என்.நேரு

விரைவில் சிவாஜி சிலை திறக்கப்படும் என்கிற நம்பிக்கை உள்ளதாக நடிகர் பிரபு தெரிவித்தார்

திருச்சி நிகழ்ச்சி ஒன்றில் சிவாஜி கணேசன் சிலை திறப்பு சம்பந்தமாக நடிகர் பிரபு கை எடுத்து கும்பிட்ட நிலையில், அமைச்சர் கே.என்.நேரு அதை கண்டுகொள்ளாமல் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்சி செயின்ட்  ஜோசப் கல்லூரி மைதானத்தில் "எங்கள் முதல்வர் எங்கள் பெருமை" என்கிற தலைப்பில் வாழ்க்கை வரலாறு புகைப்பட கண்காட்சி நடைபெறுகிறது.இதில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 70வது பிறந்த நாளை கொண்டாடும் வகையில் இந்த கண்காட்சியை கழக முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிருவாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு ஏற்பாடு செய்திருந்தார். இதனை நடிகர் பிரபு இன்று திறந்து வைத்து  பார்வையிட்டார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய நடிகர் பிரபு, "முதலமைச்சர் ஸ்டாலினுடன் சிறு வயதிலிருந்து எனக்கு பழக்கம் உள்ளது. அவரின் உழைப்பு கடினமான உழைப்பு.இன்று அவர் இந்த இடத்திலிருப்பதற்கு அவர் உழைப்பு தான் காரணம். தி.மு.க வின் உறுப்பினராக, இளைஞரணி செயலாளராக, மேயராக, துணை முதலமைச்சராக, முதலமைச்சராக இருக்கிறார். அதற்கு அவர் உழைப்பு தான் காரணம். மக்களுக்காக எவ்வளவு இறங்கி வேலை செய்துள்ளார், செய்து கொண்டுள்ளார் என்பது இந்த புகைப்பட கண்காட்சி மூலம் தெரிந்து கொள்ளலாம்.

திருச்சி எனக்கு மிகவும் நெருக்கமான ஊர். பெரியப்பா டாக்டர் கலைஞர், அப்பா சிவாஜி, மாமா அன்பில் தர்மலிங்கம் அவர்கள் எல்லாம் திருச்சியில் ஒன்றாக வளர்ந்தவர்கள்.ஷெரிஃப் என்கிற ஒரு மாட்டு வண்டிக்காரர் திருச்சியில் இருந்தார். அவரின் மாட்டு வண்டியில் நாங்கள் திருச்சியையே சுற்றி உள்ளோம். சொந்தக்காரர்களும், நண்பர்களும் அதிகம் திருச்சியில் இருக்கிறார்கள்.

திருச்சி பாலக்கரை ரவுண்டானாவில்  பத்தாண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்டு திறக்கப்படாமல் இருக்கும் சிவாஜி கணேசனின்  சிலையை தி.மு.க அரசில் திறப்பார்கள் என்பது என்னுடைய நம்பிக்கை. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் அண்ணன் கே.என் நேரு திறந்து வைப்பார் என்று நம்பிக்கை உள்ளது. அதை வேண்டுகோளாகவும் வைக்கிறேன். 

தி.மு.கவில் இருப்பவர்களுக்கு கலைஞர் மீது எவ்வளவு பிரியமோ அதே அளவு அப்பா சிவாஜி கணேசன் மீதும் பிரியம் வைத்துள்ளார்கள். விரைவில் சிலை திறக்கப்படும் என்கிற நம்பிக்கை உள்ளது" என்றார். அப்படி சொல்லும் போதே அமைச்சர் நேருவை கையெடுத்து கும்பிட்டார்.ஆனால் அமைச்சர் கே.என்.நேரு நடிகர் பிரபுவின் பேச்சை கேட்காமல் சென்றார். இதனால் நிகழ்ச்சியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com