டாக்டரை கைது செய்து சிறையில் அடைத்தனர்
திருச்சி பாலக்கரையில் சாலையில் சுற்றித்திரியும் தெரு நாயை சுட்டுக்கொன்ற டாக்டரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திருச்சி பாலக்கரையில் காஜா பேட்டை பகுதியில் வசிக்கும் சையது அசைன் சாகித், யுனானி வைத்தியம் செய்பவர். இவர் தனது வீட்டின் வாசலில் புறா உள்ளிட்ட பறவைகளை சுட்டு தொங்க விடுவதை வாடிக்கையாக கொண்டவர். தான் வைத்திருக்கும் ஏர் பிஸ்டல் துப்பாக்கி மூலம் அந்தப் பகுதியில் பறக்கும் பறவைகள் தெருவில் திரியும் நாய்களை சுடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
அந்தப் பகுதியில் வசிக்கும் மக்கள் பலமுறை இதை கண்டித்த போதும் அவர் அதை சட்டை செய்யவில்லை.ஆசிட் கலந்த குடிநீரை வாசலில் வைத்து ஏராளமான நாய்களை கொன்று உள்ளதாகவும் அந்தப் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
நேற்று முன்தினம் தனது வீட்டிற்கு வெளியே சுற்றித்திரிந்த பிறந்து சில நாட்களே ஆன ஒரு நாய்க்குட்டியை சையது அசைன் சாகித் தான் வைத்திருந்த ஏர் பிஸ்டல் துப்பாக்கியால் சுட்டு விட்டார். அந்த நாய்க்குட்டி அந்த இடத்திலேயே துடிதுடித்து செத்துவிட்டது.
இதனை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் பாலக்கரை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து பாலக்கரை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சையது அசைன் சாகித்திடம் விசாரணை நடத்தினார்கள்.விசாரணையில் அவர் நாயை சுட்டுக் கொன்றது தெரிய வந்தது.
இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த பிரபு பழனியப்பன் ஆகிய இருவரும் அளித்த புகாரின் பேரில் அவர் வைத்திருந்த நாட்டு துப்பாக்கியை போலீசார் பறிமுதல் செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.