திருப்பத்தூர்: வட்டாட்சியர் பணம் கேட்ட ஆடியோ வைரல் - மணல் கடத்தலுக்காக லஞ்சமா?

திருப்பத்தூர்: வட்டாட்சியர் பணம் கேட்ட ஆடியோ வைரல் - மணல் கடத்தலுக்காக லஞ்சமா?
திருப்பத்தூர்: வட்டாட்சியர் பணம் கேட்ட ஆடியோ வைரல் - மணல் கடத்தலுக்காக லஞ்சமா?

திருப்பத்தூர் மாவட்டத்தில் வட்டாட்சியர் பணம் கேட்ட ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி பகுதியில் உள்ள பாலாற்று படுகையில் தொடர்ந்து இரவு பகலாக மணல் கடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக நடவடிக்கை எடுத்து மணல் கடத்தலை தடுக்க வேண்டிய அரசு அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை என்றும், அதன் காரணமாக இரவு பகலாக மணல் கொள்ளை அதிகரித்து வருவதாகவும் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் குற்றம்சாட்டு எழுந்துள்ளது. 

இந்நிலையில் மணல் கடத்தலில் ஈடுபடுவதாக பொதுமக்களால் குற்றச்சாட்டுக்கு ஆளாகி வரும் உதயேந்திரம் பேரூராட்சி 10 ஆவது வார்டு தி.மு.க உறுப்பினர் ரஞ்சனியின் கணவர் ராஜி என்பவரிடம் வாணியம்பாடி வட்டாட்சியர் சம்பத் செல்போனில் தொடர்பு கொண்டு தனக்கு சேர வேண்டிய மாமூல் பணத்தை கேட்கும் ஆடியோ வெளியாகி திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகத்தை பதற வைத்துள்ளது. 

அந்த ஆடியோவில் ‘ராஜி , நான் தாசில்தார் பேசுறேன். அரை மணிநேரத்தில் அலுவலகத்துக்கு வந்துவிடுவேன். நிறைய செலவு இருக்கு. இன்னைக்கு ஒரு ப்ரோகிராமும் இருக்கு. அதனால உடனே இதே நம்பருக்கு பணம் போட்டுவிடு. கொஞ்சம் சீக்கிரமா பணம் போட்டுவிடு’ என வட்டாட்சியர் கெஞ்சுவதுபோல் அந்த ஆடியோவில் உள்ளது.    

அதற்கு, ‘நான் 11 மணிக்குள்ள பணம் போட்டுவிடுவேன். இதே நம்பருக்கு போடுறேன். என் மனைவி போன்ல இருந்து போடுறேன். மெசேஜ் வந்துடும். வந்ததும் போன் போடுங்க’ என,  10 ஆவது வார்டு தி.மு.க உறுப்பினர் ரஞ்சனியின் கணவர் ராஜி பதிலளிப்பதுபோல் அந்த ஆடியோவில் உள்ளது.      

இந்த ஆடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில் மணல் கடத்தலை தடுக்க வேண்டிய அதிகாரிகளே லஞ்சம் பெற்றுக்கொண்டு மணல் கொள்ளையர்களுடன் கைகோர்த்து இருப்பது எந்த விதத்தில் நியாயம்? மணல் கடத்தலை ஊக்குவிக்கும் இதுபோன்ற சம்பவங்கள் இனியும் தொடரக்கூடாது என, சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி, கண்டனம் தெரிவித்துள்ளனர். 

அதே சமயம் இதுகுறித்து வாணியம்பாடி வட்டாட்சியர் சம்பத்திடம் கேட்டபோது ‘இது முற்றிலும் தவறான தகவல். நான் அதை போன்று யாரிடமும் பேசவில்லை’ என சுருக்கமாக முடித்துக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com