‘உதயநிதி குறித்த தகவல் உண்மையானது’ என தி.மு.க-வின் நோட்டீசுக்கு அண்ணாமலை பதில் அளித்துள்ளார்.
‘உதயநிதி ஸ்டாலின் குறித்த தகவல்கள் உண்மையானது. எனவே பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை மன்னிப்புக் கேட்கமாட்டார்’ என, தி.மு.க சார்பில் அனுப்பப்பட்ட நோட்டீசுக்கு அண்ணாமலை தரப்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை கடந்த சில தினங்களுக்கு முன்பு தி.மு.க-வினரின் சொத்துப் பட்டியலை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார். இந்த விவகாரம் தமிழக அரசியலில் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ள நிலையில் அண்ணாமலைக்கு, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சார்பில் தி.மு.க-வின் மூத்த வழக்கறிஞர் வில்சன் நோட்டீஸ் அனுப்பினார்.
அந்த நோட்டீசில், ‘உதயநிதி ஸ்டாலின் மீது அவதூறான, உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டுகளை அண்ணாமலை வைத்துள்ளதாகவும், நோட்டீஸ் பெற்ற 48 மணி நேரத்தில் பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும், மன்னிப்புக் கேட்கத் தவறினால் அண்ணாமலை ரூ.50 கோடி இழப்பீடு வழங்க உத்தரவு பிறப்பிக்கக் கோரி வழக்குத் தொடரப்படும் என்றும் கூறப்பட்டு இருந்தது.
இந்நிலையில் உதயநிதி ஸ்டாலின் சார்பில் அனுப்பப்பட்ட நோட்டீசுக்கு பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை தரப்பில் இருந்து பதில் அளிக்கப்பட்டுள்ளது. அதில் ‘அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறித்து வெளியிட்ட தகவல்கள் அனைத்தும் உண்மையானவை. மேலும் அதில் உள்ள புள்ளி விவரங்கள் அனைத்தும் சரியானவை.
ரூ.50 கோடி நஷ்ட ஈடு கேட்டு உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பு அண்ணாமலையின் குரலை அடக்கும் முயற்சி என்றும், உதயநிதி ஸ்டாலினிடம் பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை மன்னிப்பு கேட்க மாட்டார் என்றும் அவரது தரப்பில் இருந்து பதில் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.