தமிழ்நாட்டில் சாதி ஆணவக் கொலைகள் அதிகரித்து வருவதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழ்நாட்டில் சாதி ஆணவக் கொலைகள் அதிகரித்து வருவதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழ்நாட்டில் தொடரும் சாதி ஆணவக் கொலைகளை தடுக்க தமிழக அரசு சட்டம் இயற்ற வலியுறுத்தியும், சமீபத்தில் அருணபதி கிராமத்தில் அரங்கேறிய ஆணவக் கொலைகளை கண்டித்தும் வி.சி.க-வின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் கிருஷ்ணகிரியில் இன்று நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் வி.சி.க-வின் தலைவர் திருமாவளவன் கலந்துகொண்டு பேசினார். இதைத் தொடர்ந்து திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்து கூறும்போது, ‘ஆணவக் கொலைகள் தொடர்ந்து நடைபெறும் மாவட்டமாக கிருஷ்ணகிரி உள்ளது.
வன்னியர் சமூகத்தில் உட்சாதி முரண் உள்ளது. அதனால் ஜெகன் என்பவர் பொது இடத்தில் கொடூரமாக கொல்லப்பட்டார். அருணபதி கிராமத்தில் தந்தையே பெற்ற மகனையும், தனது தாயையும் வெட்டிக் கொலை செய்துள்ளார்.
தமிழகத்தில் சாதி ஆணவக் கொலைகள் சமீபத்தில் அதிகரித்துள்ளது. வடமாநிலத்தில்தான் இதுபோல் நிகழும். தமிழகத்தில் அவ்வப்போது நடந்து இருந்தாலும் கிருஷ்ணகிரியில் அண்மைக்காலமாக நடந்து வருவது அதிர்ச்சி அளிக்கிறது.
ஆணவக் கொலை தொடர்பாக உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை ஒருபொருட்டாக கருதுவது இல்லை. இட ஒதுக்கீடு மற்றும் நீர் நிலைகளில் குடியேறுபவர்களை அகற்றுவது போன்ற விஷயங்களில் நீதிமன்ற உத்தரவை அரசு காரணம் காட்டுகின்றது.
ஆனால் இதுபோன்று ஆணவக் கொலைகள் நடக்கும்போது நீதிமன்ற வழிகாட்டுதலை மத்திய, மாநில அரசுகள் முறையாக கடைபிடிப்பது இல்லை. ஆணவ கொலை தடுப்பு சட்டத்தை நிறைவேற்ற தமிழக அரசை வலியுறுத்தி வருகிறோம்.
12 மணி நேரம் வேலை மசோதா நேற்று சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு உள்ளது. தோழமை கட்சிகளின் எதிர்ப்பை மீறி மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த மசோதா தொழிலாளர் சமூகத்திற்கு எதிரானது. தி.மு.க-வின் நம்பகத்தன்மையை இந்த மசோதா கேள்விக்குறியாக்கும்.
இந்த மசோதாவை திரும்பப் பெற வி.சி.க வலியுறுத்தி வருகிறது. தொழிலாளர் சட்ட திருத்த மசோதாவை திரும்பப் பெற முதல்வரை நேரில் சந்தித்து வி.சி.க வலியுறுத்தும்’ என்று திருமாவளவன் கூறினார். முன்னதாக அருணபதி கிராமத்தில் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட ஜெகன்-சரண்யா மற்றும் ஊத்தங்கரையில் ஆணவ படுகொலை செய்யப்பட்ட சுபாஷ்-அனுஷ்யா ஆகியோருக்கு நிவாரணம் வழங்க நிதி திரட்டப்பட்டது.
மொத்தமாக 5 லட்சத்து 25 ஆயிரம் நிதி பெறப்பட்ட நிலையில் ஊத்தங்கரையை சேர்ந்த அனுஷாவிற்கு ரூ.3 லட்சத்து 25 ஆயிரமும், கிட்டம்பட்டியை சேர்ந்த சரண்யாவிற்கு ரூ.2 லட்சமும் வழங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் பாலாஜி உள்ளிட்ட 1000க்கும் மேற்பட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியை சார்ந்தவர்கள் கலந்துகொண்டனர்.