மதுரை: ‘புள்ளிமான்களை காப்பாத்துங்க முதல்வரே' - கடிதம் எழுதிய பள்ளி மாணவிகள்

மதுரை: ‘புள்ளிமான்களை காப்பாத்துங்க முதல்வரே' - கடிதம் எழுதிய பள்ளி மாணவிகள்
மதுரை: ‘புள்ளிமான்களை காப்பாத்துங்க முதல்வரே' - கடிதம் எழுதிய பள்ளி மாணவிகள்

வறட்சி காலங்களில் ஊருக்குள் உணவு, தண்ணீருக்காக நான்குவழிச் சாலையை மான்கள் கடந்து செல்ல வரும்போது விபத்தில் அடிபட்டு இறந்துவிடுகின்றன.

கள்ளிக்குடி அருகே புள்ளிமான்கள் சாலையை கடக்க முயலும்போது விபத்துக்குள்ளாகி இறப்பது அப்பகுதியில் தொடர்ந்து நடந்து வருகிறது. இதை தடுத்து நிறுத்த வேண்டி பள்ளி மாணவிகள் முதல்வருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர்.

மதுரை அருகே கள்ளிக்குடி, சிவரக்கோட்டை நான்குவழிச் சாலையை கடந்து செல்ல முயலும்போது புள்ளிமான்கள் விபத்துக்குள்ளாகி அடிபட்டு இறப்பது அங்கு தொடர்கதையாக உள்ளது. இதை செங்கப்படை துளிர் இல்லம் மூலம் ஆய்வு செய்த பிறகு மாணவிகள் லாவண்யா, புஷ்பவதி ஆகியோ முதல்வர் தனிப்பிரிவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பினர். 

இதுகுறித்து பேசிய மாணவிகள், ‘வறட்சி காலங்களில் ஊருக்குள் உணவு மற்றும் தண்ணீருக்காக நான்குவழிச் சாலையை மான்கள் கடந்து செல்ல வரும்பொழுது விபத்தில் அடிபட்டு இறந்துவிடுகின்றன. எங்கள் வயல்களில் பயிரிடப்பட்டிருக்கும் பயிர்களையும் அவ்வப்போது மான்கள் சேதப்படுத்துவது உண்டு. அது எங்களுக்கு வருத்தமாக இருந்தாலும், காட்டு விலங்குகளின் வாழ்விடத்தை நாம் ஆகிரமித்ததால்தான் நமது வாழ்விடத்துக்கு உணவிற்காக வருகிறது என்பதை நாங்கள் உணர்ந்தோம். 

நாங்கள் துளிர் இல்லம்  சார்பில் நடத்திய மாநாட்டில் கலந்துகொண்டோம். அப்போது அவர்கள் ஏதாவது ஒரு தலைப்பில்  ஆய்வு செய்து, அதற்கு  தீர்வு காணுமாறு அறிவுறுத்தினர். நாங்கள் எங்கள் ஊரில் அடிக்கடி புள்ளிமான்கள் விபத்தில் சிக்கி இறப்பதை ஆய்வு செய்ய நினைத்தோம். எங்கள் ஊர் விவசாயிகளை நேரில் சந்தித்து பேசினோம். அவர்கள் சொன்ன விசயங்களை எல்லாம் சேகரித்த பிறகு  தமிழ்நாடு முதல்வருக்கு கடிதம் எழுதினோம்.

எங்களின் கடிதம் பரிசீலனை செய்யப்பட்டு ஸ்ரீவில்லிபுத்துாரில் உள்ள மேகமலை புலிகள் காப்பகத்துக்கு அனுப்பப்பட்டது. பிறகு புலிகள் காப்பக துணை இயக்குனர் திலீப்குமார் எங்களுக்கும், முதல்வர் தனி பிரிவுக்கும் பதில் கடிதம் அனுப்பியுள்ளார். 

எங்களின் கோரிக்கையை ஏற்று  புள்ளிமான்கள் இருக்கும் பகுதிகளில் தண்ணீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளதாகவும். ரயில்வே தண்டவாளங்களை கடக்கும்போது புள்ளிமான்கள் அடிபடாமல் இருப்பதற்காக, மெதுவாக செல்ல வேண்டும் என்கிற அறிவிப்பு பலகை வைக்கப்படும் என எங்களுக்கு பதில் கடிதம் அனுப்பிருப்பது மிகவும்  மகிழ்ச்சியாக உள்ளது." என்று அந்த மாணவிகள் நெகிழ்ச்சியுடன் கூறினர்.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com