திருப்பத்தூரில் லாரி கடத்தலில் தொடர்புடைய இன்ஸ்பெக்டர் உள்பட 6 போலீஸார் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
திருப்பத்தூர் அருகே லாரி கடத்தப்பட்ட வழக்கில் முக்கிய நபரின் பெயரை தவிர்க்க லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர் உள்ளிட்ட 6 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றாம்பள்ளியில் கடந்த 2015 ஆம் ஆண்டு லாரி ஒன்று காணாமல் போனது. இதுதொடர்பான வழக்கை அப்போது காவல் ஆய்வாளராக இருந்த காமராஜ் விசாரித்தார். வழக்கின் விசாரணையில் குறிப்பிட்ட லாரியை செம்மரம் கடத்துவதற்காக திருடியது தெரிய வந்தது. இந்த வழக்கின் முக்கிய நபராக கருதப்பட்ட அணைக்கட்டை சேர்ந்த ராஜசேகரிடம் வழக்கில் அவரது பெயரை சேர்க்காமல் தவிர்ப்பதற்காக காவல் ஆய்வாளர் காமராஜ் ரூ.7 லட்சம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.
இதில் 5 லட்சம் ரூபாயை ஏற்கனவே கொடுத்துவிட்ட நிலையில் மீதம் உள்ள ரூ.2 லட்சத்தை பெற்றபோது காவல் ஆய்வாளர் காமராஜ் லஞ்ச ஒழிப்புப் போலீசாரால் பொறிவைத்து பிடிக்கப்பட்டார். இதன் பின்னர் சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளர் காமராஜ் மற்றும் உதவி ஆய்வாளர் சேகர் இருவரும் கைது செய்யப்பட்டு சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
மேலும் இந்த வழக்கில் சம்மந்தப்பட்ட எஸ்.ஐ சேகர், தலைமைக் காவலர்கள் கார்த்திகேயன், நாசர், அறிவுச்செல்வம், ரகுராம் ஆகியோர் மீது தீவிர விசாரணை நடைபெற்று வந்தது. இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ள நிலையில் காவல் ஆய்வாளர் உள்பட 6 பேரையும் நிரந்தரமாக பணி நீக்கம் செய்து வேலூர் சரக டி.ஐ.ஜி. முத்துசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த விவகாரம் காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.