கடவுள் திருமேனிகளையும் செப்பேடுகளையும் நன்கு முறைப்படி சுத்தம் செய்து பார்த்தால்தான் தெளிவான முடிவுக்கு வர முடியும்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் உள்ள தருமை ஆதீனத்திற்கு சொந்தமான அருள்மிகு சட்டைநாதர் திருக்கோவிலில் கிடைத்துள்ள, சிலைகளையும் செப்பேடுகளையும் ஆய்வு செய்த பின்னர், அவைகள் எந்த நூற்றாண்டுகளைச் சேர்ந்தது? செப்பேடுகளில் என்ன இருக்கிறது? என தெரிந்த பின்னர் தான் நடவடிக்கை மேற்கொள்ள முடியும் என மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தெரிவித்துள்ளார்.
சீர்காழியில் உள்ள தருமை ஆதீனத்திற்கு சொந்தமான அருள்மிகு சட்டைநாதர் திருக்கோவிலில் கடந்த சில தினங்களுக்கு முன்பு புதையலாக ஐம்பொன் சுவாமி சிலைகள், பழங்கால தேவார திருப்பதிக செப்பேடுகள் கிடைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இவைகள் அனைத்தும் பிரம்மபுரீர்ஸ்வரர் ஆலயம் எதிரே பலத்த போலீஸ் பாதுக்காப்புடன் வைக்கப்பட்டுள்ளது.
அன்றைய தினமே மாவட்ட ஆட்சியர் மற்றும் இந்துசமய அறநிலையத்துறை, தொல்லியல் துறை அதிகாரிகள் வந்து பார்வையிட்டு சிலைகளை வருவாய் துறையினர் வசம் ஒப்படைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். ஆனால் கோவில் ஆதீனமோ, ’கோவில் வளாகத்தில் கிடைத்த பொக்கிஷங்களை கோவில் வளாகத்திலேயே வைத்து பாதுகாக்க வேண்டும்.
அதன் கட்டுப்பாடு உங்கள் வசம் இருக்கட்டும்’ என்று சொல்ல அதிகாரிகள் அனைவரும் அரைகுறை மனதுடன் திரும்பிச் சென்றனர். இதற்கிடையே இந்து அமைப்புகள், தமிழ் சங்கங்கள் ‘சிலைகளை தொல்லியல் துறையினர் எடுத்துச் சென்றால் போராட்டங்கள் நடத்தப்படும்’ என அறிவித்தனர்.
இந்த நிலையில், மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தலைமையில் தொல்லியல் துறை உயரதிகாரிகள் வருகை தரவுள்ளதாக திடீரென அறிவிப்பு வெளியானது. அதன்படியே மாவட்ட ஆட்சியர் மகாபாரதி, தொல்லியல்துறை காப்பாளர் மாரிமுத்து மற்றும் போலீசார் வருகையையொட்டி ஏராளமான பக்தர்கள் கூடிவிட்டனர். ஒவ்வொரு சிலைகளையும், செப்பேடுகளையும் பார்வையிட்டவர்கள் தங்களுக்குள் ஏதோ பேசியபடி திரும்பினர். சிலைகளை எடுத்தச்செல்ல வரவில்லை என பக்தர்களும் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
இதுகுறித்து, மாவட்ட ஆட்சியர் மகாபாரதி கூறுகையில், “இந்த கோவிலில் புதையலாக ஐம்பொன் சிலைகள், செப்பேடுகள் கிடைத்துள்ளது. புதையல்கள் கிடைத்தால் அதனை அரசு எவ்வாறு கையகப்படுத்தி அதை உரியவர்களிடம் எப்படி ஒப்படைப்பது அல்லது வேறு ஆய்வுகளுக்கு உட்படுத்துவது என்பதற்கான சட்டம் உள்ளது.
அந்த சட்டத்தின்படி வருவாய் துறை அதனை கையகப்படுத்தும். பின்னர் அரசு அருங்காட்சியக காப்பாளர் பார்வையிட்டு அறிக்கை கொடுப்பார். அதனை அடிப்படையாகக் கொண்டு அரசு இதழில் பிரசுரம் செய்யப்படும். இதை செய்த பிறகுதான் அடுத்தக்கட்ட நடவடிக்கையே எடுக்க முடியும்.
இப்போது, மாவட்ட நிர்வாகம் மூலம் அரசுக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. நாகை அரசு அருங்காட்சியக காப்பாளருக்கு கடிதம் அனுப்பப்பட்டு அவரும் வந்து சிலைகளையும் செப்பேடுகளையும் பார்வையிட்டுள்ளார். இந்த கடவுள் திருமேனிகளையும் செப்பேடுகளையும் நன்கு முறைப்படி சுத்தம் செய்து பார்த்தால்தான் தெளிவான முடிவுக்கு வர முடியும். வரும் புதன் கிழமை ஆய்வுக்குழு வரவுள்ளது.
சிலைகளையும் செப்பேடுகளையும் ஆய்வு செய்த பின்னர் அவைகள் எந்த நூற்றாண்டுகளை சேர்ந்தது? செப்பேடுகளில் என்ன இருக்கிறது? என தெரிந்த பின்னர்தான் நடவடிக்கை மேற்கொள்ள முடியும். அதுவரை என்ன செய்யப் போகிறோம். எப்படி சிலைகளை எடுத்துச் செல்லப் போகிறோம் என்பதை தொல்லியல் துறைதான் முடிவு செய்ய வேண்டும். அவர்களின் அரசுக்கு அளிக்கும் அறிக்கையின்படி அரசும் நடவடிக்கை எடுக்கும்” என்றார்.
-ஆர்.விவேக் ஆனந்தன்