'பணப்பட்டுவாடா, விதிமீறல்' - ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் வெற்றிக்கு எதிராக நீதிமன்றத்தில் மனு

'பணப்பட்டுவாடா, விதிமீறல்' - ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் வெற்றிக்கு எதிராக நீதிமன்றத்தில் மனு
'பணப்பட்டுவாடா, விதிமீறல்' - ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் வெற்றிக்கு எதிராக நீதிமன்றத்தில் மனு

தி.மு.க. - அ.தி.மு.க. வேட்பாளர்கள் தேர்தல் பிரசாரத்தின்போது பல்வேறு விதிமீறல்களை செய்துள்ளனர்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் செல்லாது என அறிவிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தேசிய மக்கள் சக்தி கட்சியின் வேட்பாளர் பி.விஜயகுமாரி என்பவர் மனு தாக்கல் செய்துள்ளார்.

இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தேசிய மக்கள் சக்தி கட்சி வேட்பாளர் பி.விஜயகுமாரி என்பவர் தாக்கல் செய்த மனுவில், 'தி.மு.க தலைமையிலான கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி சார்பில் அதன் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிட்டார். 

அ.தி.மு.க கூட்டணி சார்பில் கே.எஸ்.தென்னரசு போட்டியிட்டார். இவர்கள் இருவரும் தேர்தல் பிரசாரத்தின்போது பல்வேறு விதிமீறல்கள் செய்துள்ளனர். இந்த 2 வேட்பாளர்களுக்கு ஆதரவாக தினமும் 10,000க்கும் மேற்பட்டோர் வாக்கு சேகரித்தனர். அவர்களுக்கு நாளொன்றுக்கு 550 ரூபாய் வீதம் வழங்கப்பட்டது. இதற்கான உரிய கணக்குகளை தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டு 30 நாட்களைக் கடந்த நிலையிலும் இன்னும் தாக்கல் செய்யவில்லை.

வீரப்பன் சத்திரம் மற்றும் கருங்கல்பாளையம் ஆகிய பகுதிகளில் பணப்பட்டுவாடா செய்யப்பட்டது தொடர்பாக செய்திகள் வெளியிடப்பட்டதால் அந்தச் செய்தியை சேகரித்த குழுவினர் மீது ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் சார்ந்துள்ள காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் தாக்குதல் நடத்தியதில் காயமடைந்து, ஈரோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 

நட்சத்திர பேச்சாளர் அனுமதி பெற்ற பின்னரே, கட்சி வேட்பாளருக்கு வாக்கு சேகரிக்க வேண்டும் என்ற விதிமுறைகள் மீறப்பட்டுள்ளது. மேலும், குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் கொடுக்கும் திட்டம் பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிக்கப்படும் என பிரசாரத்தின்போது முதலமைச்சர் ஸ்டாலின் பேசியது தேர்தல் விதிமீறல் ஆகும்.

இதுபோன்ற பல்வேறு முறைகேடுகள் நடந்த நிலையில் அவற்றைத் தடுக்காமல் நடத்தப்பட்ட தேர்தல் நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்தப்படவில்லை. எனவே, பிப்ரவரி 27ம் தேதி நடந்த ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை செல்லாது என அறிவிக்க வேண்டும் என்றும், அதில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வெற்றி பெற்றத்தையும் செல்லாது என அறிவிக்க வேண்டும்' என மனுவில் கூறியுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com