சென்னை: 200 ஆண்டு பழைமையான 55 கற்சிலைகள் மீட்பு - ஆய்வு நடத்திய டி.ஜி.பி

சென்னை: 200 ஆண்டு பழைமையான 55 கற்சிலைகள் மீட்பு - ஆய்வு நடத்திய டி.ஜி.பி
சென்னை: 200 ஆண்டு பழைமையான 55 கற்சிலைகள் மீட்பு - ஆய்வு நடத்திய டி.ஜி.பி

சென்னையில் உள்ள வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 200 ஆண்டுகள் பழைமையான 55 கற்சிலைகள் மீட்கப்பட்டுள்ளன.

சென்னை ராஜா அண்ணாமலைபுரம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 55 பழைமையான கற்சிலைகளை கடத்தல் தடுப்பு பிரிவு டி.எஸ்.பி முத்துராஜ் தலைமையில் அதிகாரிகள் அதிரடியாக மீட்டுள்ளனர். 

இவற்றை தமிழக டி.ஜி.பி சைலேந்திர பாபு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதுதொடர்பாக சென்னை, அசோக் நகரில் உள்ள சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு அலுவலகத்தில் தமிழ்நாடு காவல் துறை இயக்குநர் சைலேந்திர பாபு செய்திகளை சந்தித்து கூறியதாவது: 

வீட்டின் உரிமையாளர் அமெரிக்காவில் உள்ள நிலையில் அவரது வீட்டில் சோதனை செய்து அதிகாரிகள் சிலைகளை மீட்டனர். இங்கு மீட்கப்பட்ட 55 புராதன சிலைகளும் 9 மற்றும் 10 ஆம் நூற்றாண்டு சிலைகளாக இருக்கலாம். இவை அனைத்தும் கோயில்களில் இருந்து திருடப்பட்ட சிலைகள் என்று ஆய்வு மூலமாக தெரிய வந்துள்ளது. 

மேலும், ஒருசில சிலைகள் வடஇந்தியாவை சேர்ந்தவைகளாக இருக்கலாம். ஒருசில சிலைகள் தென்னிந்திய சிலைகளாகக் கூட இருக்கலாம். சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பாக செயல்பட்டு 100க்கும் மேற்பட்ட சிலைகளை ஒப்படைத்து இருக்கிறது. மேலும் 1000க்கும் மேற்பட்ட மிகவும் பழைமையான சிலைகளை பாதுகாப்பாக வைத்துள்ளோம்.

போலீஸ் மற்றும் சி.சி.டி.வி கேமரா உதவியுடன் அதனை பாதுகாத்து வருகிறோம். தொழில்நுட்பத்தை பயன்படுத்தி 249 சிலைகளை இணையதளத்தில் பதிவு செய்து பொதுமக்களின் பார்வைக்கு வைத்துள்ளோம். எங்களுடைய நோக்கம் இந்த சிலைகள் எந்த கோயிலுக்கு சொந்தமானதோ? அங்கு சென்று அடைய வேண்டும் என்பதுதான். 

இங்கே சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு 55 சிலைகளை கண்டுபிடித்தது பெரிய சாதனையாகவே பார்க்கிறோம். இவைகளுக்கு விலை மதிப்பு இல்லை. சர்வதேச சந்தைகளுக்கு ஏற்றார்போல் விலையை அவர்களே நியமித்துக் கொள்கிறார்கள். சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஆரம்பித்ததில் இருந்து 576 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

மேலும், தற்போது தமிழ்நாட்டில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு கடத்தப்பட இருந்த ஆஞ்சநேயர் சிலையையும் போலீசார் மீட்டு சென்னை கொண்டு வந்துள்ளனர். அமெரிக்காவில் இருந்து மீட்கப்பட்ட ஆஞ்சநேயர் சிலையானது சம்பந்தப்பட்ட கோயிலில் ஒப்படைக்கப்படும். இவ்வாறு டி.ஜி.பி சைலேந்திர பாபு கூறினார். 

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com