அதிகாலை நேரம் மது எப்படிக் கிடைத்தது என்பது குறித்தும் போலீசார் விசாரணை
நெல்லையில் மது அருந்த டம்ளர் கொடுக்காத டீக்கடை உரிமையாளரை சரமாரியாகத் தாக்கிய தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை நகரம் தொண்டர் சன்னதியில் சுப்பையா என்பவர் டீக்கடை நடத்தி வருகிறார். இவர் வழக்கம்போல் இன்று அதிகாலை 4 மணிக்கு கடையைத் திறந்து வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தார். அப்போது அந்தப் பகுதியைச் சேர்ந்த மாரி (எ) மாரியப்பன் (39) என்பவர் சுப்பையாவின் டீக்கடைக்குச் சென்றுள்ளார்.
அப்போது மாரியப்பன் கையில் மது பாட்டிலுடன் டீக்கடைக்குச் சென்றதாகக் கூறப்படுகிறது. மேலும் மது அருந்த டம்ளர் தரும்படி சுப்பையாவிடம் மாரியப்பன் கேட்டுள்ளார். அதற்குச் சுப்பையா டீக்கடையில் வைத்து மது அருந்தக்கூடாது என்று கூறியதோடு, டம்ளர் கொடுக்கவும் மறுத்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த மாரியப்பன் எனக்கே டம்பளர் கொடுக்க மாட்டியா என டீக்கடைக்குள் புகுந்து சுப்பையாவை சரமாரியாகத் தாக்கியுள்ளார். பின்னர் அங்கிருந்த சிலர் அவரைச் சமாதானப்படுத்தி அங்கிருந்து அப்புறப்படுத்தியுள்ளனர். இதற்கிடையில் மாரியப்பன் சுப்பையாவை தாக்கும் சி.சி.டி.வி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையில் சுப்பையா அளித்த புகாரின்பேரில் நெல்லை நகரம் போலீசார் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து மாரியப்பனை கைது செய்தனர். மாரியப்பன் நகரப் பகுதியில் சுமை தூக்கும் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். ஏற்கனவே மதுவால் கொலை, கொள்ளை எனப் பல்வேறு குற்றங்கள் தொடர்ச்சியாக நடந்து வரும் சூழ்நிலையில் அதிகாலை 4 மணிக்கெல்லாம் மது அருந்த டம்ளர் கேட்டு அதைக் கொடுக்காத டீக்கடை உரிமையாளரை தொழிலாளி தாக்கிய சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் அதிகாலை நேரம் மாரியப்பனுக்கு மது எப்படிக் கிடைத்தது என்பது குறித்தும், அவர் கள்ளச் சந்தையில் மது வாங்கினாரா? என்பது குறித்தும் போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.