”இதுக்குறித்து 5 பேர் மேல் சந்தேகம் இருக்கிறது, விரிவான விசாரணையில் தான் உண்மை தெரியவரும்”
நாகையை அடுத்த நாகூர் பட்டினச்சேரி மீனவர் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வமணி. இவர் வருவாய் துறையில், வடகுடி கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருகிறார். இவர் வழக்கம்போல தனது காரை பட்டினச்சேரி புயல் பாதுகாப்பு மையம் அருகில் நிறுத்தி வைத்துள்ளர்.
இந்நிலையில், நேற்று இரவு மர்ம நபர்கள் சிலர் இவரது காரின் முன்பகுதியில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துவிட்டுத் தப்பிச்சென்றுள்ளனர். கார் தீப்பற்றி எரிவதை அறிந்த அக்கம்பக்கத்தினர் செல்வமணிக்கு தகவல் கொடுத்துவிட்டு தண்ணீர் ஊற்றி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
இதில் வாகனத்தின் முன்பகுதி தீக்கிரையானது. இது குறித்து தகவல் அறிந்த நாகூர் இன்ஸ்பெக்டர் சிவராமன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்துப் பார்வையிட்டதோடு, வழக்குப் பதிவு செய்து விசாரணையும் மேற்கொண்டுள்ளனர்.
இது குறித்து கிராம அலுவலர் செல்வமணியிடம் கேட்டபோது, “சிலர் மீது சந்தேகம் உள்ளதாகவும், அது குறித்து காவல்துறையிடம் புகார் அளித்துள்ளதாகவும், காவல்துறை நடவடிக்கை எடுப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது எனவும் கூறியுள்ளார்.
ஏற்கனவே பட்டினச்சேரி கிராமத்தில் சிபிசிஎல் எண்ணைய் குழாய் உடைந்த விவகாரத்தில் ஊர் பஞ்சாயத்தாரின் ஒரு பிரிவினர் ஆலை நிர்வாகத்திடம் பணம் வாங்கியது தொடர்பாக, விஏஓ செல்வமணிக்கும் பஞ்சாயத்தாருக்கும் விரோதம் இருந்துவந்துள்ளது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. அது தொடர்பாக யாராவது அவரது வாகனத்துக்கு தீ வைத்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
”இதுக்குறித்து 5 பேர் மேல் சந்தேகம் இருக்கிறது, விரிவான விசாரணையில் தான் உண்மை தெரியவரும்.” என நாகூர் இன்ஸ்பெக்டர் சிவராமன் தெரிவித்துள்ளார்.