மதுவை குடித்த அந்த நபர்கள் மீண்டும் தங்களுக்கு ஒரு கட்டிங் வேண்டும் என கேட்டுள்ளனர்.
ஓசியில் மது கேட்டு, தர மறுத்த நபரை மர்ம நபர்கள் இருவர் சரமாரியாக வெட்டியுள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் அந்தோணி(38), இவர் தற்போது சென்னையில் உள்ள பூந்தமல்லியில் தங்கி வெல்டராக வேலை செய்து வருகிறார். இந்நிலையில் இவர் தனது நண்பருடன் நேற்று இரவு மாங்காடு அடுத்த மலையம்பாக்கம் பகுதியில் உள்ள புளியந்தோப்பு மதுபானக்கடையில் மது அருந்திக் கொண்டிருந்தார் .
அப்போது அங்கு வந்த இரண்டு மர்ம நபர்கள் தங்களுக்கு சிறிது மது தருமாறு கேட்டுள்ளனர். அதற்கு அந்தோணி தாங்களே உடல் வலிக்காக குடித்து கொண்டிருப்பதாக கூறியுள்ளார். மேலும் அந்த நபர்கள் கேட்டதையடுத்து சிறிது மதுவையும் ஊற்றி கொடுத்துள்ளார்.
மதுவை குடித்த அந்த நபர்கள் மீண்டும் தங்களுக்கு ஒரு கட்டிங் வேண்டும் எனக் கேட்டுள்ளனர். அதற்கு தர முடியாது எனக் கூறிய அந்தோணி மற்றும் அவரது நண்பரை ஆத்திரமடைந்த மர்ம நபர்கள் திடீரென மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து தாக்க முயன்றுள்ளனர்,
இந்நிலையில் அந்தோணியும் அவரது நண்பரும் அங்கிருந்து தப்பி ஓடியும், விரட்டி சென்ற மர்ம நபர்கள் தாங்கள் வைத்திருந்த கத்தியால் சரமாரியாக தாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். இதில் அந்தோணிக்கு வாய், காது, வயிறு ஆகிய பகுதிகளில் வெட்டுக்காயம் ஏற்பட்டது.
வெட்டுக்காயம் அடைந்த அந்தோணியை அருகிலிருந்தவர்கள் மீட்டு, பூவிருந்தவல்லி அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து மாங்காடு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மாங்காடு மற்றும் நசரத்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள புளியந்தோப்பில் தினந்தோறும் ஏராளமானோர் அமர்ந்து மது அருந்திவிட்டு, பல்வேறு குற்ற சம்பவங்கள் நடந்து வரும் நிலையில், இரண்டு தரப்பு போலீசாரும் இங்கு ரோந்துப் பணியில் ஈடுபடுவதில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.