ஆம்புலன்ஸ் பிரேக் பிடிக்காமல் பின்புறமாக நகர்ந்து அருகில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது
வால்பாறையில், நோயாளியை சிகிச்சைக்கு அழைத்துச் சென்ற ஆம்புலன்ஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் நோயாளி மற்றும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் பலியாகினர்.
கோவை மாவட்டம், பாரளை எஸ்டேட் பகுதியைச் சேர்ந்த சிவகுமார் என்பவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால், 108 என்ற அவசர எண்ணிற்கு தொடர்புக் கொண்டு ஆம்புலன்ஸைஅழைத்துள்ளனர். பின் ஆம்புலன்ஸ் மூலம் சிவக்குமார் மற்றும் அவரது மனைவி சாந்தி ஆகியோர் வால்பாறையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு பாரளை எஸ்டேட் பகுதியில் இருந்து அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். ஆம்புலன்ஸை ஓட்டுநர் காளிதாஸ் என்பவர் இயக்கியுள்ளார்.
இந்நிலையில், மருத்துவமனை சாலை பகுதியில் வாகனத்தை நிறுத்தி விட்டு நோயாளியை மருத்துவமனைக்குள் அழைத்துச் செல்வதற்காக வாகனத்தின் பின்புறம் கதவை திறக்க ஓட்டுனர் காளிதாஸ் இறங்கி உள்ளார். அப்போது வாகனம் பிரேக் பிடிக்காமல் பின்புறமாக நகர்ந்து அருகில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் ஆம்புலன்ஸ்சின் பின்புறம் நின்று கொண்டிருந்த ஓட்டுனர் காளிதாஸ் மேல் வாகனம் ஏறியதால் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் வாகனத்திற்குள் இருந்த நோயாளியான சிவக்குமாரும் வாகனத்தின் அடியில் சிக்கி பலியானார்.
நோயாளியான சிவக்குமாருடன் இருந்த அவரது மனைவி சாந்திக்கு பலத்த காயம் ஏற்பட்டு தற்போது சிகிச்சைப் பெற்று வருகிறார். நோயாளியைச் சிகிச்சைக்கு அழைத்துச் சென்ற ஆம்புலன்ஸ் விபத்துக்குள்ளாகி இருவர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த விபத்து குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்