இதுவரை 65 சாட்சிகளிடம் விசாரணை செய்யப்பட்டும், பாலியல் சீண்டலுக்கான முகாந்திரம் இருப்பதாக விசாரணையில் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை
பாலியல் புகாரில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சிறப்பு காவல்துறை இயக்குநர் ராஜேஸ் தாஸ், மீண்டும் சாட்சிகள் விசாரணையை நடத்த மாவட்ட நீதிமன்றத்துக்கு உத்தரவிடக்கோரி தொடர்ந்த வழக்கில் பெண் ஐ.பி.எஸ். அதிகாரி பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அ.தி.மு.க. ஆட்சியில் அன்றைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசியல் சுற்றுப்பயணம் மற்றும் அரசு நலத்திட்டப் பணிகளை தொடங்கி வைக்க தமிழகத்தின் பல பகுதிகளுக்கும் சென்றார். அப்போது, திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களுக்குச் சென்று பல நலத்திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார்.
அப்போது, பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களுக்காக சிறப்பு காவல்துறை இயக்குநர் ராஜேஷ் தாஸ், அன்றைய முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் சென்றார். பணி முடிந்து மீண்டும் சென்னை திரும்பும் போது, ஒரு மாவட்டத்தின் பெண் ஐ.பி.எஸ் அதிகாரி ஒருவர் சிறப்பு டி.ஜி.பி ராஜேஷ் தாஸை வரவேற்று உபசரித்தார். அப்போது பெண் ஐ.பி.எஸ் அதிகாரியை காரில் ஏற்றிய சிறப்பு டி.ஜி.பி ராஜேஷ் தாஸ், அவரிடம் பாலியல் சீண்டலில் ஈடுப்பட்டதாக பகீர் புகார் எழுந்தது.
இது குறித்து, சிறப்பு டி.ஜி.பி ராஜேஷ் தாஸ் மீது பெண் ஐ.பி.எஸ் அதிகாரி, அன்றைய டி.ஜி.பி திரிபாதி மற்றும் உள்துறைச் செயலாளரிடம் புகார் அளித்தார். இதனால், ராஜேஷ் தாஸ் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார். இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இதனிடையே, பாலியல் புகாரில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சிறப்பு காவல்துறை இயக்குநர் ராஜேஷ் தாஸ், தன் மீது குற்றம் சாட்டிய பெண் காவல்துறை ஐ.பி.எஸ். அதிகாரி அவரது கணவர் உள்ளிட்ட 4 பேரை மீண்டும் சாட்சிகளாக விசாரிக்க அனுமதி கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், விழுப்புரம் மாவட்ட விசாரணை நீதிமன்றம் உண்மையை வெளிக்கொண்டுவர 4 பேரிடமும் மீண்டும் குறுக்கு விசாரணை செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2022ம் ஆண்டு பாலியல் புகார் அளித்த பெண் ஐ.பி.எஸ். அதிகாரி, அவரது கணவர், முன்னாள் காவல்துறை அதிகாரிகளிடம் விழுப்புரம் மாவட்ட விசாரணை நீதிமன்றத்தில் இரண்டு முறை விசாரணை நடைபெற்றது. வழக்கு தொடர்பாக இதுவரை 65 சாட்சிகளிடம் விசாரணை செய்யப்பட்டும், பாலியல் சீண்டலுக்கான முகாந்திரம் இருப்பதாக விசாரணையில் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.
தன் மீதான முன் விரோதம் காரணமாக அளிக்கப்பட்ட பாலியல் புகார் குறித்து உண்மையை வெளிக்கொண்டு வரும் வகையில் பெண் ஐ.பி.எஸ். அதிகாரி, அவரது கணவர், தனது வாகன ஓட்டுநர், வழக்கு பதிவு செய்த காவல்துறை அதிகாரி சுந்தர்ராஜ் ஆகிய 4 பேரிடமும் மீண்டும் விசாரணை நடத்த அனுமதி கேட்டு விழுப்புரம் மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த மார்ச் 23ம் தேதி தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
இதனால், 4 பேரிடமும் மீண்டும் விசாரணை நடத்த விழுப்புரம் நீதிமன்றத்துக்கு உத்தரவிட வேண்டும் என குறப்பிட்டுள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சந்திர சேகரன், பெண் ஐ.பி.எஸ். அதிகாரி உள்ளிட்ட 4 பேரும் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.