சென்னை: ‘முதல் குழந்தையும் அரசு மருத்துவமனையில்தான்’ –ஆச்சர்யம் அளித்த பெண் கவுன்சிலர்

சென்னை: ‘முதல் குழந்தையும் அரசு மருத்துவமனையில்தான்’ –ஆச்சர்யம் அளித்த பெண் கவுன்சிலர்
சென்னை: ‘முதல் குழந்தையும் அரசு மருத்துவமனையில்தான்’ –ஆச்சர்யம் அளித்த பெண் கவுன்சிலர்

பிரசவத்துக்கு ஒருநாள் முன்புகூட தனது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் சாலை சீரமைப்பின்போது களப்பணியில் ஈடுபட்டுள்ளார்

சென்னை மாநகராட்சியின் பெண் கவுன்சிலர் ஒருவர், அரசு மருத்துவமனையில் குழந்தை பெற்றுள்ளார். ‘மக்கள் பணி செய்வதால், இதர அரசு பணியில் உள்ள பெண்களைப்போல மகப்பேறு விடுமுறை எங்களுக்கு கிடையாது’ என்கிறார் கவுன்சிலர் ரேணுகா காவிரிசெல்வம். 

சென்னை மாநகராட்சியின் 42வது வார்டு மாமன்ற உறுப்பினராக இருப்பவர் ரேணுகா காவிரிசெல்வம். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர். இவருக்கு திருமணமாகி ஏற்கனவே ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில், தற்போது இரண்டாவதாக ஓர் ஆண் குழந்தை பிறந்துள்ளது. அதுவும், சென்னை ராயபுரத்தில் அமைந்துள்ள ஆர்.எஸ்.ஆர்.எம். அரசு மகப்பேறு மருத்துவமனையில் தான் ரேணுகா, குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார்.

தற்போது தாயும் சேயும் நலமாக உள்ளனர். முன்னதாக, நிறைமாத கர்ப்பணியாய் இருந்த போதிலும், வார்டு மக்களின் குறைகளை தீர்ப்பதில் ஆர்வம் காட்டினார். 'பிரசவத்துக்கு ஒருநாள் முன்புகூட தனது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் சாலை சீரமைப்பின்போது களப்பணியில் ஈடுபட்டுள்ளார்' என்கின்றனர் அப்பகுதி மக்கள். 

ரேணுகா காவிரிசெல்வத்திடம் குமுதம் இணையதளத்துக்காக பேசினோம். ``முதல் குழந்தையும் எனக்கு அரசு மருத்துவமனையில்தான் பிறந்தது. அரசு மருத்துவமனையில் எல்லா வசதிகளுமே உள்ளன. என்னுடைய இரத்தம் RH நெகட்டிவ் குரூப்பை சார்ந்தது. இங்கு நன்கு வைத்தியம் பார்க்கிறார்கள். தனியார் மருத்துவமனைகளைக் காட்டிலும் அரசு மருத்துவமனையில் நமக்கு தேவையான வசதிகள் நன்றாகவே கிடைக்கும் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். 

மக்கள் பிரதிநிதிகள், அரசியல்வாதிகள் போன்றோர் அரசு மருத்துவமனையை பயன்படுத்த ஆரம்பித்தால்தான், பொது மக்கள் தயக்கமின்றி அரசு சேவைகளை பயன்படுத்த முன்வருவார்கள். மக்களுக்கும் அரசுத் துறைகள் மீது நம்பிக்கை வரும். மேலும், பொது மக்களில் ஒருவராய் இருந்து நாம் செயல்படும்போதுதான் மக்கள்படும் கஷ்டங்களையும் புரிந்துகொள்ள முடியும். 

பொது சேவையில் இருப்போர் அரசு மருத்துவமனையைப் பயன்படுத்தினால்தான், அரசு மருத்துவமனையில் உள்ள நிறை, குறைகள் தெரியும். அப்போது, கண்ணுக்குத் தென்படும் குறைகளையும் சரி செய்ய முடியும்' என்றார். 

தொடர்ந்து பேசிய ரேணுகா காவிரிசெல்வம், ``கவுன்சிலர் என்பதால் எங்களுக்கு அதிக சம்பளம், பேறுகால விடுமுறை எல்லாம் இருக்கும் என சிலர் நினைக்கிறார்கள். ஆனால் நிஜம் அதுவல்ல. எங்களுக்கு மாநகராட்சி கூட்டம் நடக்கும்போது சிட்டிங் சார்ஜ் மட்டுமே உண்டு. மகப்பேறு விடுமுறை எல்லாம் கிடையாது. சென்னையில் உள்ள பெண் கவுன்சிலர்களில் அதிகமானோர் இளம் பெண்கள்தான். எனவே, இவர்களுக்கு மகப்பேறு விடுமுறையாக குறைந்தது 3 மாதங்களாவது கொடுத்தால் நன்றாக இருக்கும். இதை ஒரு புது முயற்சியாகக்கூட மாநகராட்சி செய்தால் உதவியாக இருக்கும். 

மக்கள் பணி செய்வதால், இதர அரசுப் பணி செய்யும் பெண்களுக்கு மகப்பேறு காலத்தில் அளிக்கப்படும் விடுமுறைபோல எங்களால் நீண்ட விடுமுறையில் இருக்க முடியாது. என்னைப் போன்றோரின் உடல் நலத்தைக் கருத்தில் கொண்டு, குறைந்தது 3 மாதம் காலம் மகப்பேறு விடுமுறை கொடுப்பதை அரசுக்கு பரிந்துரை செய்யலாம். இதன்மூலம் உடல்நலத்தைப் பேணி  ஆரோக்கியமாக களப்பணி செய்வதற்கு ஏதுவாக இருக்கும்’’ என்கிறார். 

``என்னைப் பொறுத்தவரையில், என்னுடைய பணியில் முழு உழைப்பையும் போட்டு மக்கள் பணி செய்கிறேன். உடல் நலம் சார்ந்த காரணங்களைத் தவிர மற்ற எந்த காரணத்துக்காகவும் நான் மக்கள் பணி செய்வதில் தாமதம் காட்டியதில்லை.  விடுமுறையும் எடுத்ததில்லை. மக்கள் பணி என்பது எனக்கு அது மகிழ்ச்சியான பணி’’ என்கிறார் ரேணுகா காவிரிசெல்வம்.

-ஜெஸ்பெல் எஸ்லின்

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com