காதல் விவகாரத்தில் தாக்கப்பட்ட கல்லூரி மாணவர் விக்னேஷ், சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
காதல் விவகாரத்தில் கலைக்கல்லூரி மாணவர் ஒருவர் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் ஆட்டோ டிரைவர், கல்லுாரி மாணவர்கள் உள்ளிட்ட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
கரூர் மாவட்டம் குளித்தலை அடுத்துள்ளது ஐயர்மலை. இங்கு அரசு கலைக் கல்லூரியில் 2ம் ஆண்டு கணிதம் படித்து வரும் மாணவன் குரு பிரசாத். இவர் அதே கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வரும் மாணவியை ஒருவரை காதலித்து வந்துள்ளார். அதேபோல, அந்த மாணவியும் குரு பிரசாத்தை காதலித்து வந்துள்ளார்.
இந்த நிலையில், மாணவி திடீரென குருபிரசாத்திடம் பேசுவதை நிறுத்திவிட்டு, குட்டப்பட்டியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் அருண்குமார் என்பவரை காதலித்துள்ளார். இதனால், மனவேதனை அடைந்த குருபிரசாத் இது குறித்து தனது காதலியுடன் தொலைபேசியில் விளக்கம் கேட்டுள்ளார். இதனால், இவர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் வெடித்துள்ளது.
இந்த நிலையில், ஐயர்மலை கடைவீதியில் குருபிரசாத் மற்றும் ஐ.டி.ஐ-யில் படிக்கும் அவரது பெரியப்பா மகன் விக்னேஷ் ஆகியோர் நின்று பேசிக்கொண்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த ஆட்டோ டிரைவர் அருண்குமார் மற்றும் அவரது கூட்டாளிகள் செல்லதுரை, அதே கல்லூரியில் படிக்கும் விஜய், சரவணன் மற்றும் கோட்டை மேடு பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் குமார் ஆகியோர் குருபிரசாத்திடம் வாக்குவாதம் செய்துள்ளனர். இதனையடுத்து, அவரை கடுமையாக தாக்கிவிட்டு தப்பிவிட்டனர்.
இதில், படுகாயம் அடைந்த மாணவன் குருபிரசாத், அவரது நண்பர் விக்னேஷ் ஆகியோரை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு, குளித்தலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதில், சிகிச்சை பலனின்றி விக்னேஷ் உயிரிழந்தார்.
இது தொடர்பாக, வழக்கு பதிவு செய்த போலீசார், ஆட்டோ டிரைவர் அருண்குமார், மற்றும் அவரது கூட்டாளிகள் செல்லதுரை, விஜய், சரவணன், சந்தோஷ் குமார் ஆகிய 5 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.