டி.ஜி.பி பதவியில் இருந்து ஓய்வுப் பெற இருக்கும் நிலையில் டி.என்.பி.எஸ்.சி தலைவராக சைலேந்திர பாபு நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி) தலைவராக இருந்த அருள்மொழி ஐ.ஏ.எஸ் கடந்த 2020 ஆம் ஆண்டு ஓய்வுப் பெற்றார். இதைத் தொடர்ந்து டி.என்.பி.எஸ்.சிக்கு புதிய தலைவராக பாலச்சந்திரன் ஐ.ஏ.எஸ் நியமனம் செய்யப்பட்டார்.
தஞ்சாவூரை சேர்ந்த பாலச்சந்திரன் திண்டுக்கல் மாவட்டம் பழனி துணை ஆட்சியராக 1986 ஆம் ஆண்டு தனது பணியை தொடங்கினார். கடந்த 1994 ஆம் ஆண்டு இந்திய ஆட்சி பணியில் தமிழ்நாடு பிரிவில் நியமனம் செய்யப்பட்டார். மேலும் தருமபுரி, கன்னியாகுமரி, ஈரோடு, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களின் ஆட்சித்தலைவராக பாலச்சந்திரன் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.
இந்நிலையில் டி.என்.பி.எஸ்.சி தலைவராக இருந்து வந்த பாலச்சந்திரன் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 9 ஆம் தேதி பணி ஓய்வுப் பெற்றார். இதையடுத்து புதிய தலைவர் நியமிக்கப்படும் வரை டி.என்.பி.எஸ்.சி உறுப்பினராக இருந்து வரும் சி.முனியநாதன் பொறுப்புத் தலைவராக நியமிக்கப்பட்டார்.
இவர், நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர், ஆதிதிராவிடர் நலம் மற்றும் தொழிலாளர் நலத்துறையில் ஆணையர் உள்ளிட்ட பொறுப்புகளை வகித்துள்ளார். மேலும் கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய உறுப்பினராக இருந்து வருகிறார்.
ஏற்கனவே உள்ள 4 உறுப்பினர்களில் ஒருவர் தற்காலிக தலைவர் பொறுப்பை வகிக்கும் நிலையில் மீதம் உள்ள 3 பேரில் கிருஷ்ணகுமார் என்கிற உறுப்பினர் இன்றுடன் ஓய்வு பெறுகிறார்.
டி.என்.பி.எஸ்.சி அமைப்பை பொறுத்தவரையில் தலைவர் மற்றும் 13 உறுப்பினர்கள் பணியாற்ற வேண்டும். ஆனால் பல மாதங்களாக உறுப்பினர் பணியிடங்கள் காலியாக உள்ளதோடு தலைவர் பணியிடமும் நிரந்தரமாக நிரப்பப்படாமல் உள்ளது.
இதனால் மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை 2 ஆக சுருங்கி இருக்கிறது. இதன் காரணமாக அரசு துறைகளுக்கு தேவையான பணியாளர்களை நியமனம் செய்ய முடியாமல் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் திண்டாடி வருகிறது.
எனவே இனியும் டி.என்.பி.எஸ்.சி அமைப்புக்கு தலைவர் மற்றும் உறுப்பினர் பணியிடங்கள் நிரப்படாவிட்டால் வரக்கூடிய நாட்களில் பணிகள் மேலும் ஸ்தம்பிக்கும் நிலை ஏற்படும் என்று, துறை சார்ந்த வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
இதற்கிடையே வரும் ஜூன் மாதம் டி.ஜி.பி பதவியில் இருந்து சைலேந்திரபாபு ஓய்வுப் பெற உள்ளதால் டி.என்.பி.எஸ்.சி-க்கு தலைவராக அவர் நியமிக்கப்பட இருப்பதாக என தகவல்கள் வெளியாகி உள்ளது. இதற்காகவே தலைவர் பதவி இன்னமும் நிரப்பப்படாமல் உள்ளதாகவும் பரவலாக பேசப்படுகிறது.