நோயாளியின் உறவினர்களை சிறைபிடித்த டாக்டர்கள் - அரசு மருத்துவமனையில் என்ன நடந்தது?
திருவாரூரில் அரசு மருத்துவமனையில் பயிற்சி மருத்துவரை தாக்கிய நோயாளியின் உறவினர்களை மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனை பணியாளர்கள் சிறை பிடித்ததால் அங்கு பரபரப்பு நிலவி வருகிறது.
திருவாரூர் நகரில் வசித்து வருபவர் பிரேம் நசீர். பிரேம் நசீருக்கும் அவரது சகோதரருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அதில் காயமடைந்த நசீர், திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இந்த நிலையில், பிரேம் நசீரின் உறவினர்களான திருவாரூர் விஜயபுரம் பெரிய பள்ளிவாசல் ஜமாத் செயலாளர் ஹக்கீம் மற்றும் சம்சுதீன் உள்ளிட்ட ஏராளமானோர் அரசு மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டுள்ள நசீரை நலம் விசரிக்கச் சென்றனர்.
அப்போது, அங்கு பணியில் இருந்த பயிற்சி மருத்துவர் பிரகதீஸ் என்பவரிடம் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டுள்ள தனது உறவினர் நசீரை சரியாகக் கவனிக்க வேண்டும் என கூறியுள்ளார். அப்போது, இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், பிரேம் நசீரின் உறவினர்களான திருவாரூர் விஜயபுரம் பெரிய பள்ளிவாசல் ஜமாத் செயலாளர் ஹக்கீம் மற்றும் சம்சுதீன் உள்ளிட்ட சிலர், பயிற்சி மருத்துவரை தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இதற்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில், அரசு மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள், பணியைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களை சிறை பிடித்து, இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மருத்துவமனையில் சிறை பிடிக்கப்பட்டிருந்த தனது உறவினர்களை மீட்கும் வகையில், இஸ்லாமிய அமைப்பை சேர்ந்த ஏராளமானோர் மருத்துவமனை முன்பு கூடியதால் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.
இந்த நிலையில், திருவாரூர் துணை காவல் கண்காணிப்பாளர் சிவராமன் தலைமையிலான நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். இதனால், அங்கு பரபரப்பு நிலவி வருகிறது.