விபத்து குறித்து பரங்கிமலை போக்குவரத்துப் புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
சென்னை அருகே மோட்டார்சைக்கிளில் அதிவேகமாகச் சென்ற பிளஸ்-1 மாணவன் மெட்ரோ ரெயில் தூணில் மோதி பலியானார். மற்றொருவர் கவலைக்கிடமான நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சென்னை, ஆலந்தூர் காஜி தெருவில் வசித்து வருபவர் அப்துல் ஆபித். இவரது மகன் முகமது ரய்யான் (16). இவர் அங்குள்ள பள்ளி ஒன்றில் பிளஸ்-1 படித்து வருகிறார். இவரும், இவரது பள்ளி நண்பரான முகமது ரீஹன் (16), இருவரும் ரம்ஜான் மாதத் தொழுகையை முடித்த நிலையில், மோட்டார் சைக்கிளில் எம்.கே.என். ரோடு வழியாக சென்றுள்ளனர்.
அப்போது, ஆலந்தூர் செல்லும் வழியில் மெட்ரோ நிலையம் அருகே இருவரும் மோட்டார் சைக்கிளில் அதிவேகமாக சென்றுள்ளனர். அப்போது, எதிர்பாராதவிதமாக பிளாட்பாரத்தின் ஓரத்தில் இருந்த கற்கள் மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில், மெட்ரோ ரெயில் தூணில் முகமது ரய்யானின் தலைமோதி, அதே இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.
பின்னால், அமர்ந்து வந்த முகமது ரீஹனுக்கு இரு கைகளிலும் எலும்பு முறிவு ஏற்பட்டு, சிகிச்சைக்காகக் சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து தகவல் அறிந்த பரங்கிமலை போக்குவரத்துப் புலனாய்வு பிரிவு போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.