'ராஜ்பவன் நிகழ்ச்சிகளில் மீனவர்களுக்கும் இடம்' - ஆளுநர் ஆர்.என்.ரவி உறுதி

'ராஜ்பவன் நிகழ்ச்சிகளில் மீனவர்களுக்கும் இடம்' - ஆளுநர் ஆர்.என்.ரவி உறுதி
'ராஜ்பவன் நிகழ்ச்சிகளில் மீனவர்களுக்கும் இடம்' - ஆளுநர் ஆர்.என்.ரவி உறுதி

பிரதமர் எப்போதும் அடித்தட்டு மக்களைப் பற்றியே சிந்தித்து வருகிறார்

ராமநாதபுரம் அருகே தேவிப்பட்டினத்தில் நவபாஷாண நவகிரகக் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு மீனவர் சங்கம் நடத்தும் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்றார் ஆளுநர் ஆர்.,என்.ரவி.

தேவிப்பட்டினத்தில் மீனவர் சங்கம் நடத்தும் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. அதில் கலந்து கொண்ட ஆளுநர் ஆர்.என்.ரவி, "17 கிராம மீனவர்களுடன் உரையாடினார். மீனவர்கள் தங்கள் பகுதிகளில் உள்ள குடிதண்ணீர் பிரச்னை, சாலை வசதி, புயல் பாதுகாப்புக் கட்டிடம் உள்ளிட்ட கோரிக்கைகளை ஆளுநரிடம் முன் வைத்தனர். 

மீனவ சமுதாயம் மகாபாரதக் காலத்தில் இருந்து இருப்பதால் இந்திய நாட்டின் முக்கியமான சமுதாயமாகக் கருதப்படுகிறது. மீனவர்கள் நாட்டில் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியப் பங்காற்றுகின்றனர். வருகின்ற காலத்தில் கடல் சார்ந்த உணவுகள் அனைத்திலும் முக்கியமானதாக இருக்கப்போகிறது. 

மீனவர்கள் அனைவரும் கடலுக்குள் சென்று தங்களின் உயிரை பணயம் வைத்து நமக்கு மீன்களைத் தருகின்றனர். கடலின் சீற்றத்தையும் இயற்கையின் பேரிடர் காலத்தையும் முதலில் சந்திப்பவர்கள் மீனவர்களே. தனது சொந்த வாழ்க்கையும் குடும்ப வாழ்க்கையும் பணயம் வைத்து கடலுக்குள் செல்கின்றனர். இதை நமது நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி நன்கு அறிவார்.

மீனவப் பழங்குடியினருக்கு நமது அரசு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது. மீனவர்கள் நலம் சார்ந்த பல திட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. பிரதமர் எப்போதும் அடித்தட்டு மக்களைப் பற்றியே சிந்தித்து வருகிறார். வருகின்ற காலங்களில் மீனவர்களுக்கு என்று தனித் திட்டங்கள் வகுக்கப்பட உள்ளது. 

அடுத்த 25 வருடத்தில் இந்தியா முழு வளர்ச்சியை அடைந்துவிடும் அதற்கு மீனவ சமுதாயத்தின் பங்கு மிகப் பெரிய பங்காக இருக்கும். தங்களின் பிரச்னைகளைத் தெரிந்து கொண்டு மத்திய அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்லவே நான் இங்கு வந்துள்ளேன். வரும் காலங்களில் ராஜ்பவனில் நடக்கக்கூடிய அனைத்து விசேஷங்களிலும் மீனவர்கள் கண்டிப்பாக இடம் பெறுவார்கள். மீனவர்களின் பிரச்னைகள் அனைத்தும் கண்டிப்பாகத் தீர்க்கப்படும்’ என்றார்.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com