'முன்பதிவு டிக்கெட்டுக்கு 30 ரூபாய் கூடுதலா?' - போக்குவரத்துக் கழகத்துக்கு எதிராக கொதிக்கும் பயணிகள்

'முன்பதிவு டிக்கெட்டுக்கு 30 ரூபாய் கூடுதலா?' - போக்குவரத்துக் கழகத்துக்கு எதிராக கொதிக்கும் பயணிகள்
'முன்பதிவு டிக்கெட்டுக்கு 30 ரூபாய் கூடுதலா?' - போக்குவரத்துக் கழகத்துக்கு எதிராக கொதிக்கும் பயணிகள்

இனி இது மாதிரி தவறுகள் நிகழாது என தகவல்

தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து பேருந்துகளில் வெளியூர் செல்ல ஒரு டிக்கெட் ரிசர்வேஷன் செய்வதற்கு ரூ.30 கூடுதலாக செலுத்த வேண்டி இருப்பதாக பயணிகள் புகார் கூறுகின்றனர். 

நாகப்பட்டினம், கும்பகோணம் பேருந்து நிலையங்களில் தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக்கழகத்தின் பயணிகள் முன்பதிவு மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த மையங்களில் கடந்த சில மாதங்களாக ஒரு டிக்கெட்டிற்கு எந்த காரணமும் சொல்லப்படாமல் ரூ.30 அதிகம் பெறப்படுவதாகப் புகார்கள் எழுந்துள்ளன. 

அந்தவகையில் சுவாமிமலையைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி விமலநாதன் என்பவர் கும்பகோணத்தில் உள்ள தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக்கழக முன்பதிவு மையத்தில் சென்னை செல்ல ரிசர்வ் செய்துள்ளார். அப்போது ரூ.30 அதிகம் பெற்றிருக்கின்றனர். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் உயர் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்துள்ளார். 

இந்த விவகாரம் குறித்து அவரிடம் கேட்டபோது, ‘’மாற்றுத்திறனாளியான நான் கடந்த மாதம் 5ம் தேதி உதவியாளர் ஒருவருடன் சென்னை செல்ல கும்பகோணம் தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக்கழக முன்பதிவு மையத்திற்கு சென்று டிக்கெட் வாங்கினேன். அப்போது எனக்குத் தரப்பட்ட பயணச்சீட்டில்  பயணக்கட்டணம் எவ்வளவு? முன்பதிவு கட்டணம் எவ்வளவு? என்ற எந்த விபரமும் இல்லை. அத்துடன் ஒரு பயணிக்கு 30 ரூபாய் கூடுதலாக தர வேண்டும் என்றார்.

அங்கே இருந்த ஊழியர் ஒருவரிடம் ஏன்? எதற்கு? என்று கேட்டதற்கு அவரிடமிருந்து சரியான பதில் கிடைக்கவில்லை. ’சரி, ஒவ்வொரு பயணிக்கும் 30 ரூபாய் அதிகம் தருகிறேன். அதனை டிக்கெட்டில் குறிப்பிட்டுக் கொடுங்கள்’ என்று கேட்டதற்கு, ‘அதெல்லாம் தர முடியாது. உன்னால் என்ன செய்ய முடியுமோ செய்துகொள்’ என்று பேசினார். இது முறையற்ற செயல். பகல் கொள்ளை என போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு புகார் அனுப்பியுள்ளேன்.

இந்த முன்பதிவு மையத்தை தனியார் வசம் ஒப்படைத்திருப்பதாகவும், அவர்கள்தான் அரசின் எந்த அனுமதியும் இல்லாமல் 30 ரூபாய் வசூலிப்பதாகச் சொல்கிறார்கள். அதிலும் முன்பதிவு மையத்தை டெண்டர் எடுத்திருப்பது உதயநிதி ஸ்டாலினுக்கு மிகவும் வேண்டப்பட்டவர் என்றும் சொல்கிறார்கள். 

நான் விசாரித்த வகையில்  நாகப்பட்டினம் மற்றும் கும்பகோணம் முன்பதிவு மையத்தில் மட்டும் இப்படி ஒரு பயணியிடம் 30 ரூபாய் அதிகம் வசூலிப்பதன் மூலம் ஒரு நாளைக்கு பல ஆயிரங்கள் லாபம் சம்பாதிக்கின்றனர். ஏற்கனவே கும்பகோணத்தில் செயல்பட்டு வந்த தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக முன்பதிவு மையத்தையும் மூடிவிட்டனர். ஏன் மூடினார்கள் என்பதும் ரகசியமாகவே இருக்கிறது” என்றார்.

இதுகுறித்து கும்பகோணம் கிளை தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழக அதிகாரி ஒருவர், “புகார் செய்த நபரிடம் அதிகப்படியாக வசூலித்த தொகை திருப்பி கொடுக்கப்பட்டுவிட்டது. இனி இது மாதிரி தவறுகள் நிகழாது.” என்றார். ஆனால் நாம் விசாரித்த வகையில் மீண்டும் 30 ரூபாய் அதிகமாக கட்டணம் வசூலிக்கப்படுவதாகத்தான் தெரிகிறது. இதுகுறித்து இனி முதல்வர் நடவடிக்கை எடுத்தால்தான் உண்டு.

-ஆர்.விவேக்

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com