நிதி நிறுவன மோசடியில் துணைநின்ற டி.எஸ்.பி - 6,000 கோடி விவகாரத்தில் அடுத்து சிக்கப் போவது யார்?

நிதி நிறுவன மோசடியில் துணைநின்ற டி.எஸ்.பி - 6,000 கோடி விவகாரத்தில் அடுத்து சிக்கப் போவது யார்?
நிதி நிறுவன மோசடியில் துணைநின்ற டி.எஸ்.பி - 6,000 கோடி விவகாரத்தில் அடுத்து சிக்கப் போவது யார்?

தனியார் நிதி நிறுவன மோசடியில் டி.எஸ்.பி துணை நின்றது உறுதிசெய்யப்பட்ட நிலையில் 6,000 கோடி விவகாரத்தில் அடுத்து சிக்கப் போவது யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது.

சென்னையில் உள்ள ஐ.எஃப்.எஸ் நிதி நிறுவனம் 1 லட்சம் ரூபாய்க்கு மாதம் 30 ஆயிரம் ரூபாய் வட்டித் தருவதாக ஆசை வார்த்தைகள் கூறி 84 ஆயிரம் வாடிக்கையாளர்களிடம் இருந்து 6000 கோடி ரூபாய் வரை மோசடியில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. 

இதுதொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின்பேரில் ஐ.எஃப்.எஸ் நிறுவனத்தின் இயக்குநர்கள் மற்றும் ஊழியர்களின் மீது பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து சிலரை கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டு வந்தனர்.

இதற்கிடையே இந்த மோசடி வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் லட்சுமி நாராயணன் வீட்டில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தி 4 வாகனங்கள் மற்றும் முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர். சோதனையில் சென்னை பொருளாதார குற்றப்பிரிவு டி.எஸ்.பி கபிலன் மற்றும் அருள் ஆகியோர் தலைமையில் போலீசார் ஈடுபட்டனர். 

இந்த நிலையில் இந்த வழக்கில் மேற்கொண்டு நடவடிக்கை எதுவும் இல்லாமல் இருந்தது. இதுதொடர்பாக துறைரீதியாக நடந்த விசாரணையில்  நிதி நிறுவனத்தைச் சேர்ந்தவர்களிடம் டி.எஸ்.பி கபிலன் பேரம் பேசி இருப்பதும், நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்காக 5 கோடி ரூபாய் லஞ்சம் வாங்கியதும் தெரியவந்தது. 

இதையடுத்து சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்தில் அதிரடி ஆய்வு மேற்கொண்ட  உயர் அதிகாரிகள் அவரது வீட்டில் இருந்து 5 கோடி ரூபாயை பறிமுதல் செய்தனர். இதனைடுத்து உடனடியாக அவர், பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். 

பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் டி.எஸ்.பி ஒருவர் லஞ்சம் பெற்ற விவகாரம் காவல் துறை மற்றும் முதலீட்டாளர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் பொருளாதார குற்றப்பிரிவு ஏ.டி.ஜி.பி அபின் தினேஷ் மோடாக் உத்தரவின்பேரில் இந்த வழக்கு லஞ்ச ஒழிப்புத் துறைக்கு மாற்றப்பட்டுள்ளது. 

அதன்படி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரின் விசாரணைக்கு பிறகே இந்த விவகாரத்தில் இன்னும் எத்தனை ஆடுகளுக்கு தொடர்பிருக்கிறது? என்பது குறித்து தெரிய வரும் என, கூறப்படுவதால் காவல் துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. 

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com