காதலி தற்கொலையை வீடியோ காலில் ரசித்ததாக காதலனை போலீசார் கைது செய்திருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டம் திருவெண்காடு அருகில் உள்ள மருதூர் பகுதியைச் சேர்ந்தவர் அர்ச்சனா (24 ). இவர், திருவாரூர் மாவட்டம் நன்னிலம் எழில் நகரில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். கடந்த ஏப்ரல் 12 ஆம் தேதி வழக்கம்போல் அர்ச்சனா மதிய உணவு இடைவேளைக்கு செல்ல வேண்டிய நேரத்திற்கு அரை மணி நேரம் முன்பே வயிறு வலிப்பதாகக் கூறிவிட்டு சென்றுள்ளார்.
அவரைத் தொடர்ந்து அர்ச்சனாவின் தோழி மதிய உணவு இடைவேளைக்காக வீட்டிற்கு சென்றபோது அர்ச்சனா வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு சடலமாக தொங்கியது தெரிய வந்தது. இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது தோழி போலீசுக்கு தெரியப்படுத்தியுள்ளார்.
தகவலறிந்து உடனடியாக சம்பவ இடத்துக்கு நன்னிலம் காவல்துறையினர் வந்து, அர்ச்சனாவின் உடலை கைப்பற்றி பிரத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவரது செல்போனை கைப்பற்றி போலீஸார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் நாகப்பட்டினம் மாவட்டம் வடகாடு பஞ்ச நதிக்குளம் பகுதியைச் சேர்ந்த அர்ச்சனாவின் காதலன் சத்யராஜ் (26) என்பவருக்கு சம்பவத்தில் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து சத்யராஜை பிடித்து போலீசார் விசாரித்தபோது திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.
அதில் அர்ச்சனாவை காதலித்து வந்த சத்யராஜுக்கு கடந்த 2 ஆண்டுகளாக அவரது உறவுக்கார பெண்ணின் மீது காதல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக காதலி அர்ச்சனாவுடனான தொடர்பைத் துண்டிக்க சத்யராஜ் முயற்சி செய்துள்ளார். இதனால் மனமுடைந்த அர்ச்சனா ஏப்ரல் 12 ஆம் தேதி தற்கொலை செய்துகொண்டது விசாரணையில் தெரிய வந்தது.
இதற்கிடையே அர்ச்சனா தற்கொலை செய்துகொண்டதை சத்யராஜ் வீடியோ காலில் பார்த்து ரசித்ததாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளதாக கூறுப்படுவதால் இதுதொடர்பாக சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னதாக சத்யராஜ் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.