வால்பாறையில் நிலவும் பல்வேறு பிரச்னைகளை தீர்க்கக் கோரி பிச்சைக்காரர் வேடத்தில் ஐ.என்.டி.சி செயலாளர் பரமசிவம் மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்துள்ளார்.
கோவை மாவட்டம் வால்பாறையில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் குறைதீர்ப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் ஐ.என்.டி.யூ.சி. செயலாளர் பரமசிவம் பிச்சைக்காரன் வேடம் அணிந்து கோரிக்கை மனு ஒன்றை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி-யிடம் வழங்கினார்.
அந்த மனுவில், 'வால்பாறை பகுதியில் ஏராளமான தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் உள்ளனர். அவர்களுக்கு சம்பளம் மற்றும் ஊதிய உயர்வு வழங்க வேண்டும். வால்பாறையில் உள்ள தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் தங்களது வருங்கால வைப்பு நிதி பணத்தை பெறுவதற்கு கோவை பகுதியில் உள்ள அலுவலகத்திற்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது.
இவ்வாறு செல்லும் தொழிலாளர்களை அங்குள்ள வருங்கால வைப்பு நிதி அலுவலக அதிகாரிகள் சரியான முறையில் வழிகாட்டுதல்கள் வழங்காமல் அலைக்கழிப்பு செய்து வருகின்றனர். இதனால், தொழிலாளர்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர்.
எனவே, வால்பாறையில் மாதம்தோறும் குறைதீர் முகாம் நடத்த வேண்டும். வால்பாறை புதிய பேருந்து நிலையத்திலிருந்து கூழாங்கல் ஆறு செல்லும் சாலையில் அப்பகுதி பொதுமக்கள் வளர்க்கும் நூற்றுக்கும் மேற்பட்ட எருமை மாடுகள் திடீரென குறுக்கிடுவதால் இரவு நேரங்களில் விபத்து ஏற்படுகிறது என தெரிவித்துள்ளார்.
மேலும், அவர் அந்த மனுவில், இங்குள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பெண் மருத்துவர்கள் இல்லாததால் மகளிர் சிகிச்சை பெறுவதில் சிக்கல் உள்ளது. எனவே, தேவையான அளவு பெண் மருத்துவர்களை நியமிக்க வேண்டும். வாடகை கட்டிடத்தில் இயங்கி வரும் மின்சார அலுவலகத்திற்கு சொந்தமாக இடம் அமைத்துதர வேண்டும்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்த சாலை விரிவாக்க பணியின்போது 50க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளின் கடைகள் அகற்றப்பட்டது. உடனே அவர்களுக்கு கடை வழங்க வேண்டும்' என அதில் தெரிவித்துள்ளார்.