அதிகாரிகள் யாரும் பேருந்தில் பயணம் செய்ய எனக்கு உதவவில்லை
சென்னையில் அரசு பேருந்தில் மாற்றுத்திறனாளி கிரிக்கெட் அணியின் கேப்டன் சச்சின் சிவா அவமானப்படுத்தப்பட்ட விவகாரத்தில், சம்பந்தப்பட்ட பேருந்து நடத்துனர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
இந்தியாவில் மாற்றுத்திறனாளி கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்து வருபவர் சச்சின் சிவா. இந்திய மாற்றுத்திறனாளி கிரிக்கெட் அணிக்கு கேப்டனாகப் பொறுப்பேற்றுக் கொண்ட முதல் தமிழரான இவரை, சென்னை கோயம்பேடு அரசு பேருந்தில் ஏறவிடாமல் நடத்துனர் தடுத்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
என்ன நடந்தது எனச் சச்சின் சிவாவிடம் பேசினோம். 'நேற்று இரவு என் சொந்த ஊரான மதுரை செல்வதற்காகக் கோயம்பேடு வந்தேன். அங்கு SETC பேருந்தில் ஏற முயன்ற போது மாற்றுத்திறனாளிகள் அந்தப் பேருந்தில் பயணிக்க அனுமதி இல்லை என்று கூறி நடத்துனர் ராஜா என்னைத் தடுத்தார்.
பொதுவாக, மாற்றுத்திறனாளிகளுக்கு பஸ் டிக்கெட்களில் சலுகைகள் வழங்கப்படும். ஆனால், ஏ.சி., பேருந்துகளில் மட்டும் சலுகைகள் இல்லை என்பதால் பயணிக்க அனுமதிக்கப்படுவதில்லை.
ஆனால், நேற்று நான் பயணம் செய்ய முயன்ற பேருந்தில் மாற்றுத் திறனாளிகள் பயணிப்பதற்கு எந்தவித தடையும் இல்லை. இதை கண்டக்டரிடம் எடுத்துக் கூறிய போது அவர் கெட்ட வார்த்தைகளால் என்னைத் திட்டினார்.
இதைத் தட்டிக் கேட்டபோது என் மீது அடிக்கப் பாய்ந்தார். இதையடுத்து பேருந்து முன்பு நான் தர்ணாவில் ஈடுபட்டேன். மேலும் நடந்த சம்பவத்தையும் வீடியோவாக பதிவு செய்து கொண்டேன். பிறகு, அந்தப் பகுதியில் இருந்து காவல்துறையினர் கூட என்னைச் சமாதானம் செய்து அழைத்துச் சென்றனர். ஆனால், அதிகாரிகள் யாரும் பேருந்தில் பயணம் செய்ய எனக்கு உதவவில்லை.
தொடக்கத்தில் நடத்துனரிடம் நான் கிரிக்கெட் வீரர் என்று சொல்லவில்லை. நான் கிரிக்கெட் வீரராக இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி. பேருந்தில் பயணிப்பது எனது அடிப்படை உரிமை. அதைப் பறிக்கும் வகையில் ஈடுபட்ட நடத்துநர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இரண்டு மாதங்களுக்கு முன்புதான் SETC பஸ்ஸில் இதே போன்ற ஒரு சம்பவம் எனக்கு நேர்ந்தது. இதை எடுத்து உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்து அதன் பிறகு பயணிக்க அனுமதித்தனர்.
மீண்டும், இதே போன்ற ஒரு அனுபவம் ஏற்படவே அதை வீடியோவாகப் பதிவு செய்து வெளியிட்டேன். இது குறித்து கமிஷனர் அலுவலகத்தில் முறையாகப் புகார் அளித்துள்ளேன்' என்றார்.
மாற்றுத்திறனாளி கிரிக்கெட் அணியின் கேப்டன் சச்சின் சிவா விவகாரத்தில் நடந்தது என்ன என்று போக்குவரத்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் ஆகியோர் விசாரணை நடத்தினர். இதனையடுத்து, சம்பந்தப்பட்ட நடத்துநர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
- அபிநவ்