அமுதா ஐ.ஏ.எஸ். விசாரணைக்கு மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது
திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் காவல் சரக உதவி கண்காணிப்பாளராகப் பணியாற்றிய பல்வீர் சிங், விசாரணைக் கைதிகளின் பற்களைப் பிடுங்கிய விவகாரத்தில், இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றி உத்தரவிடப்பட்டுள்ளது..
அம்பாசமுத்திரம் காவல் சரக உதவி கண்காணிப்பாளராக இருந்த பல்வீர் சிங் விசாரணை கைதிகளின் பற்களைக் கொடூரமாகப் பிடுங்கி சித்ரவதை செய்ததாத புகார் எழுந்தது. இது தொடர்பாக, மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி அமுதா உயர்மட்ட விசாரணை நடத்தி வருகிறார்.
ஏற்கனவே, இந்த விவகாரத்தில் சார் - ஆட்சியர் விசாரணை நடத்திய நிலையில், தமிழக அரசு கூடுதலாக உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டிருந்தது.
இதைத்தொடர்ந்து, உயர்மட்ட விசாரணை அதிகாரி அமுதா கடந்த வாரம் திங்கள்கிழமை அன்று முதல் கட்ட விசாரணையைத் தொடங்கினார். அன்று பாதிக்கப்பட்ட ஒருவர்கூட ஆஜராகாத நிலையில் நேற்று தனது இரண்டாம் கட்ட விசாரணையை அதிகாரி அமுதா தொடங்கினார்.
அம்பாசமுத்திரம் தாலுகா அலுவலகத்தில் வைத்து நடைபெற்ற இந்த விசாரணையில் நேற்று ஏ.எஸ்.பி பல்வீர் சிங்கால் பாதிக்கப்பட்ட 13 பேர் தங்கள் வழக்கறிஞர்களுடன் விசாரணைக்கு ஆஜராகினர்.
அந்த வகையில், பாதிக்கப்பட்ட அருண்குமார், கணேசன் மற்றும் இரண்டு சிறார்கள் தரப்பில் மக்கள் கண்காணிப்பக இயக்கத்தின் நிறுவனரும், வழக்கறிஞருமான ஹென்றி தீபன் விசாரணையில் பங்கேற்றார்.
விசாரணைக்குப் பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ஹென்றி தீபன், இந்த விவகாரத்தில் மாவட்ட ஆட்சியர் தனது கடமை தவறிவிட்டதாகவும், உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, நெல்லை மாவட்ட காவல் நிலையங்களில் சி.சி.டி.வி கேமராக்கள் முறையாகப் பொருத்தப்படவில்லை என்றும் குற்றம் சாட்டினார்.
இந்த நிலையில், இந்த வழக்கில் அமுதாவின் இடைக்கால விசாரணை அறிக்கையின் பரிந்துரையை ஏற்று, இந்த வழக்கு சி.பி.சி.ஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை தமிழக காவல்துறை தலைவர் சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.