சாலையில் வரும் மனிதர்களைப் பற்றி அக்கறை இல்லாமல் திட்டமிட்டு பேருந்தை அதிபயங்கரமாக ஓட்டி உயிர் பலி வாங்கப்படுகிறது
திருச்சியில் தனியார் பேருந்துகளின் கலெக்சன் போட்டி மற்றும் சாலைகளில் தறிகெட்டு ஓடும் அவலம் காரணமாக அப்பாவி இளைஞர் ஒருவர் பலியான சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில், சென்னை தவிரப் பிற மாநகரங்களில் அரசு பேருந்துகளைத் தாண்டி கூடுதலாகத் தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், திருச்சியில் பேருந்துகள் சாலைகளில் எடுக்கும் வேகம் பேருந்தில் பயணிப்பவரையும் சாலையில் செல்வோரையும் கதி கலங்க வைப்பது வாடிக்கையாக உள்ளது.
திருச்சி ஜங்ஷன் அருகேயுள்ள ரயில்வே குடியிருப்பில் இருந்து அருகில் உள்ள முனீஸ்வரன் கோவில் பகுதியில் குடிநீர் எடுப்பதற்காக இன்று 35 வயது மதிக்கதக்க இளைஞர் ஒருவர் சென்றார்.
அந்த நபர் , குடிநீர் எடுத்து விட்டு வீடு திரும்க் கொண்டிருந்தார். அப்போது, சாலையைக் கடக்கும்போது திருச்சி தலைமை தபால் நிலையத்திலிருந்து ஜங்ஷன் நோக்கி அதிவேகமாக வந்த தனியார் பேருந்து ஒன்று இவர் மீது மின்னல் வேகத்தில் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட இளைஞர் அதே இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இந்த விபத்து குறித்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது, விபத்தில் இறந்துபோன நபர் பெயர் மோகன் என்று தெரிய வந்தது. இவர், திருச்சி ஜங்ஷன் ரயில்வே காலனி பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவரது மகன் என்றும், இவருக்குத் திருமணம் ஆகி 10 மாதங்கள் ஆகிறது என்றும், ரயில்வே ஊழியரான இவருக்குப் பிரியா (வயது 27 ) என்ற மனைவி உள்ளார் என்றும் தெரிய வந்தது.
மேலும், இந்த இரண்டு பேருந்துகளும் பாலக்கரை பகுதியிலிருந்து கடுமையான போட்டியில் ஒருவரை ஒருவர் முந்துவதற்கு முயன்று வந்த போது இந்த விபத்து நடந்துள்ளது எனத் தெரிய வந்தது.
திருச்சியில் நடைபெறும் சாலை விபத்துக்கள் குறித்துச் சமூக ஆர்வலர்கள் சிலரிம் பேசிய போது, ' திருச்சியில் பல்வேறு தனியார் பேருந்து நிறுவனங்கள் நகர்ப்புற பகுதிகளில் பேருந்துகளை இயக்கி வருகின்றன. ஒரு சில நிமிடங்கள் முன்னால் போனால் அதிக பயணிகளை ஏற்ற முடியும் என்பதால் பேருந்து ஓட்டுநர்களுக்கு இடையே பந்தயம் நடப்பது அன்றாட நிகழ்வாக உள்ளது.
அதிலும், ஏற்கனவே ஆக்கிரமிப்புகளால் சுருங்கிப் போன சாலைகளில் ஒருவரோடு ஒருவர் போட்டி போட்டு பேருந்து முந்திக்கொண்டு போகும் நேரங்களில் அந்தப் பேருந்தின் சக்கரங்களில் சிக்கும் பாதசாரிகள் மற்றும் இரு சக்கர வாகன ஓட்டிகள் உயிரையோ அல்லது கையையோ அல்லது காலையோ இழப்பது தினம்தோறும் நடக்கும் நிகழ்வாகவாக மாறிவிட்டது.
இந்த விவரங்கள் அனைத்தும், வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள், போக்குவரத்துக் காவல்துறை அதிகாரிகள், போக்குவரத்துத் துறை அதிகாரிகள் போன்றவர்களுக்குத் தெரிந்த போதும், இதை அவர்கள் கண்டு கொள்வதில்லை.
தங்களது பேராசையால் சாலையில் வரும் மனிதர்களைப் பற்றி அக்கறை இல்லாமல் திட்டமிட்டு அதி பயங்கரமாக ஓட்டி உயிர் பலி வாங்கினாலும், இது விபத்து என்கிற வகையிலேயே நீதிமன்றத்திற்கு போகிறது. மேலும், சட்டத்தில் உள்ள ஓட்டைகளை பயன்படுத்தி கடுமையான தண்டனையில் இருந்து தப்பிவிடுகின்றனர்.
இப்படி ஆபத்தான வகையில் பேருந்துகளை இயக்கி விபத்து ஏற்படுத்தும் ஓட்டுநர்களுக்கு கடுமையான தண்டனை, மற்றும் விபத்து ஏற்படுத்தும் பேருந்துக்கு அபராதம், சாலையில் குறிப்பிட்ட சில காலத்துக்காவது ஓட்ட முடியாத அளவுக்குத் தடை விதிப்பது போன்ற நடவடிக்கைகள் எடுத்தால் இன்றி இப்படிப்பட்ட பகல் நேர படுகொலைகளுக்கு முடிவு கட்ட முடியாது' என்கின்றனர்.
- ஷானு.