இந்த சந்தையில் குண்டூசி முதல் வெள்ளி வரை விற்பனை செய்யப்படுகிறது
'குப்பைமயமாக காட்சியளித்த போச்சம்பள்ளி வாரச் சந்தையை உரிய வசதிகள் செய்து சீரமைக்குமாறு' மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவிட்டுள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி வாரச்சந்தை தமிழகத்தின் இரண்டாவது மிகப் பெரிய வாரச்சந்தையாகும். ஞாயிறு தோறும் நடைபெறும் இந்த சந்தையில் மக்கள் கூட்டம் அலை மோதும்.
அது மட்டுமில்லாமல், ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் வந்து பொருட்கள் வாங்கிச் செல்வது வழக்கம். மேலும், இந்த சந்தையில் குண்டூசி முதல் தங்கம் வரை விற்பனை செய்யப்படுவதால் போச்சம்பள்ளி சுற்று வட்டார பகுதிகள் மற்றுமின்றி தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் மக்கள் வருகின்றனர்.
இந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளாக இந்த சந்தை துர்நாற்றம் மற்றும் பராமரிப்பு இன்றி குப்பை கூளங்களாக காட்சியளித்து வந்தது.
இந்த சந்தையை சீர்படுத்தக் கோரி பல்வேறு தரப்பினரும் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்தனர். இந்த நிலையில், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் தீபக் ஜேக்கப் சந்தையை ஆய்வு செய்தார். அப்போது, சந்தையில் குடிநீர் வசதி, கழிவறை வசதி, கால்நடைகளுக்கு குடிநீர் வசதி, சுற்று சுவர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை விரைந்து செய்ய வேண்டும்' என உத்தரவிட்டார்.