'ஜூஸ நினைச்சாலே வேர்த்துக் கொட்டுது' ; அழுகிய பழங்கள், காலாவதி குளிர்பான அபாயம்

'ஜூஸ நினைச்சாலே வேர்த்துக் கொட்டுது' ; அழுகிய பழங்கள், காலாவதி குளிர்பான அபாயம்
'ஜூஸ நினைச்சாலே வேர்த்துக் கொட்டுது' ; அழுகிய பழங்கள், காலாவதி குளிர்பான அபாயம்

பாட்டிலில் அடைக்கப்பட்ட, வேதிப்பொருள் நிரம்பிய குளிர்பானங்களை தவிர்ப்பது நல்லது

கோவை மாவட்டத்தின் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கடந்த 10ம் தேதி முதல் 13ம் தேதி வரையில் மாவட்டம் முழுக்க 275 கடைகளில் திடீர் ஆய்வு நடத்தி, காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக 18 கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கியுள்ளனர்.

ஜூஸை நினைத்தாலே வியர்த்து கொட்டுகிறது: அழுகிய பழங்கள், காலாவதி குளிர்பான அபாயம். நீங்கள் நம்பவில்லை என்றாலும் அதுதான் உண்மை. 

ஊட்டியிலேயே வெயில் வாட்டி வதைக்கிறது. திருநல்வேலியில வெயில் தாங்க முடியலையேன்னு சொல்லி, காருக்கு போனா போதுன்னு டீசலை போட்டுட்டு ஊட்டியில குளிர் எதிர்பார்த்து போன அண்ணாச்சி ஒருவர் ‘எலே என்ன இங்கன இந்த வெயிலு அடிக்கி... இதுக்கு நம்மூர்லேயே நாலு பாக்கெட் ரஸ்னாவ குடிச்சுட்டு வீட்லேயே கெடந்திருப்பேனே. காசுக்கு பிடிச்ச கேடா மக்கா. ஊட்டிக்கு வந்தும் வியர்த்து கொட்டிட்டு கெடக்கேம்’என்று புலம்பிக் கொட்டிட்டு இறங்கியிருக்கிறார்.

அது ஒரு பக்கம் கெடக்கட்டும். வெளுக்கும் வெயிலை சமாளிக்க வீட்டுக்குள்ளே நாமெல்லாம் தேடுவது தண்ணீர். வெளியே போனால் பாட்டில் ஜூஸ் அல்லது ஃப்ரெஷ் ஜூஸ். கடந்த இரண்டு மூன்று வாரங்களாக பழக்கடைகளில் பிஸினெஸ் பின்னி எடுத்து வருகிறது. அதிலும் ஜூஸ் கிடைக்கும் கடைகளில் டபுள் லாபம் தான். டிமாண்ட்டை பயன்படுத்தி ஜூஸ் கடைக்காரர்கள் வெச்சதுதான் விலை என்று போய்க் கொண்டிருக்கிறது நிலைமை.

ஒரு குடும்பம் ஜூஸ் குடிக்கும் செலவில் ஒரு மோட்டர் சைக்கிளே வாங்கிடலாம் போல. அந்தளவுக்கு ஹெவி ரேட் சொல்வதாக மக்கள் புலம்புகிறார்கள். சரி, அந்தளவுக்கு விலை வைத்து விற்றாலும் தரமான ஜூஸை தருகிறார்களா? என்று கேட்டால், பதில் சந்தேகம்தான். 

அரசாங்கம் நினைத்தால் அநியாய விலையையும் கட்டுப்படுத்த முடியும். தரமான பொருட்கள் மட்டுமே மக்களுக்கு சென்றடையும் வகையில் பார்த்துக் கொள்ள முடியும். ஆனால், அரசாங்கம் அப்படி நினைக்கிறதா? என்று கேட்டால் அதற்கும் சந்தேகம்தான் என்றே பதில் வருகிறது. 

ஆனாலும், கூட சில மாவட்டங்களில், மாநகரங்களில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அதிரடி ரெய்டு நடத்தி மக்களின் பாதுகாப்பை உறுதி செய்கிறார்கள். இப்படித்தான் கோவை மாவட்டத்தின் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கடந்த 10ம் தேதி முதல் 13ம் தேதி வரையில் மாவட்டம் முழுக்க 275 கடைகளில் திடீர் ஆய்வு நடத்தியுள்ளனர். 

இதில் 38 கடைகளில் பதினைந்தாயிரத்து இருநூற்று இருபத்தைந்து ரூபாய் மதிப்பிலான ஐம்பது கிலோ அழுகிய பழங்கள், பேக்கிங் தேதி இல்லாமல் மற்றும் காலாவதியான நிலையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த சுமார் ஐம்பது லிட்டர் குளிர்பானங்களை பறிமுதல் செய்தனர்.

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக பதினெட்டு கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. அதிரடியான நடவடிக்கைதான். இந்த அதிரடி இடைவெளியில்லாமல் கோவையிலும் மற்ற மாவட்டங்களிலும் நடத்தப்பட்டால் மக்களின் ஆரோக்கியம் அதீதமாய் மேம்படும். மருத்துவ செலவும் பெருமளவு குறையும். 

சரி, அழுகிய பழங்கள் மற்றும் காலாவதியான குளிர்பானங்களை குடிப்பதனால் என்னென்ன உடல்நலக்குறைவு ஏற்படும் என்று டாக்டர். குமாரிடம் கேட்டபோது, ’’அழுகிய பழங்களால் தயாரிக்கப்பட்ட பழச்சாறுகளை குடிக்கும் போது வயிறு உப்புசம் போன்ற அசெளகரியம் உருவாகும்.

வாந்தி, கடுமையான வாந்தி ஏற்பட்டு உடலின் நீர் சத்து குறையலாம். குடலில் ஒவ்வாமையை இது உருவாக்கும். ஒரு வகையான அஜீரண கோளாறு உருவாகி அது காய்ச்சலை தரலாம். மேலும் காலாவதியான குளிர்பானங்களாலும் இதே அசெளகரியங்கள் ஏற்படும். 

பாட்டிலில் அடைக்கப்பட்ட, வேதிப்பொருள் நிரம்பிய குளிர்பானங்களை தவிர்ப்பது நல்லது. இவை நம் குடலில் துவங்கி உடலின் பல பாகங்களுக்கு எதிரியானவை. ஜூஸ் மற்றும் குளிர்பானங்கள் தயாரிப்புக்கு நிறைய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அவற்றை பல நிறுவனங்கள், கடைகள் பின்பற்றுவதே இல்லை என்பதுதான் வருத்தமான உண்மை. 

இனிப்பு சுவையை பழங்களில் அதிகப்படுத்தவும், கனிந்த நிறத்தை உருவாக்கவும், செயற்கையாக பழுக்க வைக்கவும், சிலர் வேதிப்பொருட்களை பயன்படுத்துகிறார்கள். இப்படி தயாராகும் பழங்களை சாப்பிடுவதன் மூலம் மிக கடுமையான வயிற்று கோளாறுகள் உருவாகலாம்” என்கிறார்.

- எஸ்.ஷக்தி

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com