'நடிகர் விஜய்தான் என்னை ஆதரிக்க வேண்டும்' என நா.த.க தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
விஜய் மக்கள் இயக்கம் சமீபகாலமாக தேர்தல் அரசியலில் தலைகாட்டி வருகிறது. கூடவே மக்கள் நலத் திட்டங்களை செய்வது, அம்பேத்கர் உள்ளிட்ட தலைவர்களின் பிறந்த நாள் மற்றும் நினைவு நாளில் மரியாதை செய்வது போன்ற செயல்களிலும் ஈடுபட்டு வருகிறது.
விஜய் மக்கள் இயக்கத்தின் இதுபோன்ற செயல்பாடுகள் விஜய்-யின் அரசியல் வருவதற்கான முன்னோட்டம் என ரசிகர்கள் கருத்து கூறி வருகின்றனர். இதுதொடர்பாக விஜய் மக்கள் இயக்க மாநில நிர்வாகி புஸ்ஸி ஆனந்த் சமீபத்தில் கூறும்போது ‘விஜய் மக்கள் இயக்கம் அரசியல் கட்சியாக மாறுமா? இல்லையா? என்பது பின்னர் அறிவிக்கப்படும்’ என சஸ்பென்சாக கூறியிருந்தார்.
இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தபோது, ‘விஜய் அரசியலுக்கு வருவது அவரது சமீபகால செயல்பாடுகளின் மூலம் தெரிகிறது. அதை நாங்கள் வரவேற்கிறோம். இப்போது மாற்று அரசியல் முக்கியமான ஒன்றாக உள்ளது. விஜய் அரசியலுக்கு வந்தால் அது மாற்று அரசியலுக்கு ஆதரவாக இருக்கும். எனவே விஜய் அரசியலுக்கு வர வேண்டும். தமிழக அரசியலில் நாம் தமிழர் கட்சி தனித்த பேரியக்கம் என்பதால் நாங்கள் அவரை ஆதரிக்க முடியாது.
நீண்ட காலமாக எங்களது கொள்கை வழியில் தமிழ் மற்றும் தமிழர் உரிமைகளுக்காக களத்தில் நின்று கொண்டிருக்கிறோம். எனவே விஜய்தான் எங்களை ஆதரிக்க வேண்டும். எங்களுடைய கோட்பாட்டை ஏற்றுக்கொண்டு வருபவர்களுடன் இணைந்து நாங்கள் பயணிப்போம்’ என சீமான் கூறினார்.