குருபரப்பள்ளி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கிருஷ்ணகிரி அருகே தேசிய நெடுஞ்சாலையில் பைக் சாகசத்தில் ஈடுபட்ட இருவர் மரணமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் இரவு மற்றும் பகல் நேரங்களில் இருசக்கர வாகனத்தில் செல்லும் சில இளைஞர்கள் பைக் சாகசத்தில் அவ்வப்போது ஈடுபட்டு வருகின்றனர். இருசக்கர வாகனத்தின் முன்புற சக்கரத்தை தூக்கியபடியும், ஒருவருக்கொருவர் முண்டியடித்துக் கொண்டு அதிவேகமாகக் கைகளை விட்டும், இருசக்கர வாகனங்களை மோதிக் கொண்டும் சாகச விளையாட்டு ஈடுபடுகின்றனர். இந்தப் பைக் சாகசத்தைத் தடுக்கும் வகையில் அவ்வப்போது தேசிய நெடுஞ்சாலை ரோந்து காவலர்கள் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் ஓசூர் அருகே மத்திகிரி பகுதியைச் சேர்ந்த சபரி ( 24), கர்நாடக மாநிலம் பொம்மச்சந்திரா பகுதியை சேர்ந்த அபிஹர்ஷா (27) மற்றும் மத்திகிரி பகுதியைச் சேர்ந்த நோபிக் (24) மற்றும் ஒருவர் என 4 பேர் 2 இருசக்கர வாகனத்திலும் மேலும் 10 பேர் சில பைக்களிலும் ஓசூர் கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் பைக் சாகசத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
அதிகாலை கிருஷ்ணகிரி அருகே ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் பந்தாரப்பள்ளி என்னும் இடத்தில் இவர்கள் 2 இருசக்கர வாகனங்களையும், ஒருவருக்கொருவர் மோதிக் கொண்டு சாகசத்தில் ஈடுபட்டுக் கொண்டுள்ளனர். அப்போது எதிர்பாராமல் நடந்து விபத்தில் 2 பைக்குகளும் மோதிக்கொண்டதில் சபரி மற்றும் ஹர்ஷா ஆகிய இருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர்.
நோபிக் என்பவர் பலத்த காயமடைந்து கவலைக்கிடமான நிலையில், கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மற்றொருவர் விபத்து நடந்தவுடன் அங்கிருந்து தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் தொடர்பாகக் குருபரப்பள்ளி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.