'கிறிஸ்துவராக மாறிய ஆதிதிராவிடர்களுக்கும் இடஒதுக்கீடு' - சட்டப்பேரவையில் நிறைவேறிய தனி தீர்மானம்
மனிதர்கள் தாங்கள் விரும்பும் மதத்தைப் பின்பற்ற உரிமை உண்டு. ஆனால் சாதி என்பது மாறுதலுக்கு உட்பட்டது அல்ல.
கிறிஸ்தவராக மாறிய ஆதி திராவிடர்களுக்கும் இடஒதுக்கீடு தொடர்பாக சட்டத்தில் உரிய திருத்தங்களை மேற்கொள்ளுமாறு மத்திய அரசை வலியுறுத்தி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சட்டப்பேரவையில் தனித்தீர்மானத்தை முன்மொழிந்தார். இந்த தீர்மானம் சட்டப்பேரவையில் இன்று நிறைவேற்றப்பட்டது.
சட்டப்பேரவையில் இதுபற்றி முதல்வர் உரை நிகழ்த்தும்போது, ‘கிறிஸ்துவர்களாக மதம் மாறிய ஆதி திராவிடர்களையும் பட்டியலில் சேர்த்து, அந்தப் பட்டியலின மக்களுக்கும் அரசியலமைப்புச் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள அனைத்து உரிமைகளையும் வழங்க வேண்டும் என்ற தீர்மானத்தை இந்த மாமன்றத்தில் கொண்டு வர விரும்புகிறேன்.
ஆதிதிராவிடர்களாக இருந்து மதம் மாறிய பின்னரும் தீண்டாமை உள்ளிட்ட சாதிய வன்கொடுமைகளுக்கு அவர்கள் ஆளாவது தொடரவே செய்கிறது. எனவே இதனை கனிவோடு நாம் கவனிக்க வேண்டியவர்களாக இருக்கிறோம். நமது நாட்டின் அரசியல் சட்டப்படி இந்து, சீக்கியர், பௌத்த மத்தைத் தவிர்த்து பிற மதங்களைச் சேர்ந்த யாரும் பட்டியலின வகுப்பைச் சேர்ந்தவராகக் கருதப்பட முடியாது.
வரலாற்று ரீதியாகவே அவர்கள் ஆதி திராவிடர் வகுப்பினராக இருக்கும்போது, அவர்களுக்குப் பட்டியலின வகுப்புக்கான உரிமைகளை வழங்குவதே சரி. அதன் மூலமாகத்தான் அவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவை கிடைக்கும்’ என்றும் தெரிவித்தார்.
மேலும், ‘மதம் மாறிவிட்டார்கள் என்பதற்காக சமூகரீதியாக அவர்களுக்குத் தரப்பட்டு வந்த, அதே சமூகத்தைச் சேர்ந்த மற்றவர்கள் அனுபவித்து வரும் உரிமைகளை இவர்களுக்குத் தர மறுப்பது சரியல்ல என்பதுதான் நமது நிலைப்பாடு. மனிதர்கள் தாங்கள் விரும்பும் மதத்தைப் பின்பற்ற உரிமை உண்டு. ஆனால் சாதி என்பது மாறுதலுக்கு உட்பட்டது அல்ல. அந்த வகையில் கிறிஸ்துவர்களாக மதம் மாறிய ஆதி திராவிடர்களுக்கும், அரசியல் சட்ட சமூகநீதி உரிமைகள் தரப்பட வேண்டும்’ என கூறினார்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் பட்டியலின மக்களுக்கு இணையாக கிறிஸ்துவ ஆதி திராவிடர்களும் சலுகைகள் பெறும் வகையில் அரசாணைகள் வெளியிட்டு உரிய பயன்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அரசியலமைப்பு (பட்டியலின சாதிகள்) திருத்த ஆணை 1950-ன்படி, இந்து மதத்தில் இருந்து வேறுபட்ட மதத்தைக் கூறும் எவரும் அட்டவணை சாதிகளின் உறுப்பினராக ஆக முடியாது.
ஆனால், 1956 ஆம் ஆண்டு சீக்கிய மதத்தைப் பின்பற்றுபவர்களையும், 1990 ஆம் ஆண்டு பவுத்த மதத்தைப் பின்பற்றுபவர்களையும், பட்டியல் சாதியினராகச் சேர்க்கும் வகையில் திருத்தம் செய்யப்பட்டது. இதேபோன்ற திருத்தத்தைத்தான் கிறிஸ்தவர்களாக மதம் மாறிய ஆதி திராவிடர்களும் எதிர்பார்க்கிறார்கள். இந்த கோரிக்கையை பல்வேறு தரப்பினரும் அரசுக்கு வைத்திருக்கிறார்கள் என்றும் அவர் கூறினார்.
மேலும் ஆதி திராவிடர் வகுப்பைச் சேர்ந்தவர்கள் மதம் மாறும்போது, தானாக ஆதி திராவிடர் வகுப்பில் இருந்து வெளியேறி விடுகிறார்கள் என்றும், மதம் மாறிய பின்னும் அவர்களுக்கு ஆதி திராவிடர் வகுப்பைச் சேர்ந்தவர் என்று சாதிச் சான்றிதழ் இருந்தால் அது செல்லாது.
மதம் மாறியவர்களுக்கு ஆதி திராவிடர் வகுப்பு சான்றிதழ் வழங்கப்பட்டால் அது போலிச் சான்றிதழ் என்றும் தேசிய ஆதி திராவிடர் ஆணையத் துணைத் தலைவர் கடந்த ஆண்டு சொல்லி இருந்தார். அப்போது பல்வேறு தரப்பினரும் இதற்குக் கடுமையாக எதிர்ப்பை தெரிவித்தார்கள்.
இதைத் தொடர்ந்து உச்சநீதிமன்ற முன்னாள் நீதியரசர் கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையிலான ஆணையம் ஒன்றை ஒன்றிய அரசு அமைத்துள்ளது. இந்த ஆணையம் இந்தியா முழுமையும் சுற்றுப்பயணம் செய்து, அனைத்து மாநிலங்களின் கருத்தையும் பெற்ற பிறகே இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு கூறி முதலமைச்சர் இந்த தனித்தீர்மானத்தை முன்மொழிந்தார். இந்த தீர்மானம் இன்று சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.