தமிழகத்தில் ‘மதம் மாறினாலும் தீண்டாமை தொடர்வதாக அரசு சொல்கிறதா?’ என வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ ஆவேசத்துடன் கேள்வி எழுப்பியுள்ளார்.
கிறிஸ்தவராக மாறிய ஆதி திராவிடர்களுக்கும் இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக சட்டத்தில் உரிய திருத்தங்களை மேற்கொள்ளுமாறு மத்திய அரசை வலியுறுத்தி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சட்டப்பேரவையில் தனித் தீர்மானத்தை முன்மொழிந்தார்.
இந்த தீர்மானம் குறித்து பா.ஜ.க உறுப்பினர் வானதி சீனிவாசன் பேசியபோது ‘அவர் தீண்டாமை குறித்து சொன்ன கருத்துகள் அவைக்குறிப்பில் இடம்பெறாது’ என சபாநாயகர் தெரிவித்தார். இதனால் பா.ஜ.க உறுப்பினர்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.
அதைத் தொடர்ந்து பா.ஜ.க எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்து கூறும்போது, ‘மத்திய அரசு பட்டியலினத்தவருக்கான சலுகைகளை, கிறிஸ்தவ, இஸ்லாம் மதம் மாறிய பட்டியலினத்தவருக்கும் வழங்குவது தொடர்பாக ஓய்வுபெற்ற முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி கே.ஜி பாலகிருஷ்ணன் தலைமையில் ஆய்வுக் குழுவை ஏற்படுத்தி ஆராய்ந்து வருகிறது.
இந்த நிலையில் இந்த தீர்மானம் கொண்டு வரப்பட்டிருக்கிறது. இந்த தனித்தீர்மானம் அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது. ஏனென்றால் இதுதொடர்பாக பல்வேறு ரிட் மனுக்கள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கின்றன.
கடந்த வாரம்கூட இந்த விவகாரம் குறித்த விசாரணை நீதிமன்றத்தில் நடந்தது. அடுத்த மாதத்துக்கு இந்த விசாரணையை நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. நீதிமன்ற வரம்பிற்குள் இருக்கும் இந்த விவகாரத்துக்கு எதற்கு தீர்மானம் கொண்டு வர வேண்டும்?
இதன் மூலம் பட்டியலின மக்கள் கிறிஸ்தவ, இஸ்லாம் மதத்துக்கு மாறினாலும் தீண்டாமை தொடரும் என தி.மு.க அரசு மறைமுகமாக சொல்கிறதா? திராவிட மாடல் அரசு என மார்தட்டிக்கொள்ளும் இந்த அரசு பட்டியலின மக்களின் பிரச்னையான வேங்கைவயல் விவகாரம், பஞ்சமி நில மீட்பு சிறப்பு சட்டம், ஆணவக் கொலை தடுப்புச் சட்டம் உள்ளிட்டவற்றை குறித்து அக்கறையில்லாமல் இந்த தீர்மானம் கொண்டு வந்திருப்பதில் அரசியல் உள்நோக்கம் இருக்கிறது.
பொது மயானம், பஞ்சமி நிலம், ஆணவக்கொலை, தென் தமிழகத்தில் கிறிஸ்தவர்களாக இருந்தாலும் ஒவ்வொரு சாதியை சேர்ந்தவர்களுக்கும் ஒரு மயானம் உள்ளிட்ட விவகாரங்கள் மாநில அரசின் வரம்புக்குள் வருகின்றன.
அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் பட்டியலின மக்களை ஏமாற்றி துரோகம் செய்து, எதிர் வரும் பாராளுமன்றத் தேர்தலை முன்வைத்து இந்த தீர்மானம் கொண்டுவரப்பட்டிருப்பதாக கருதுகிறோம். அதனால்தான் இந்த தனித்தீர்மானத்தை எதிர்த்து வெளிநடப்பு செய்திருக்கிறோம்’ என கூறினார்.