சீர்காழி: ‘கோவிலில் கிடைத்த புதையலை தொல்லியல் துறையிடம் ஒப்படைக்கக் கூடாது’ - இந்து அமைப்புகள் கோரிக்கை

சீர்காழி: ‘கோவிலில் கிடைத்த புதையலை தொல்லியல் துறையிடம் ஒப்படைக்கக் கூடாது’ - இந்து அமைப்புகள் கோரிக்கை
சீர்காழி: ‘கோவிலில் கிடைத்த புதையலை தொல்லியல் துறையிடம் ஒப்படைக்கக் கூடாது’ - இந்து அமைப்புகள் கோரிக்கை

ஆன்மிக மரபை நன்கு அறிந்த அறிஞர்களைக் கொண்டு ஆய்வு நடத்த உத்தரவிட வேண்டும்

‘சீர்காழி சட்டைநாதர் கோவிலில் புதையலாய் கிடைத்த சிலைகள் மற்றும் செப்பேடுகளை கோவிலிலேயே பாதுகாப்பாக வைத்து பராமரிக்க வேண்டும் எனவும் தொல்லியல் துறையினர் வசம் ஒப்படைக்க கூடாது’ எனவும் இந்து அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் தருமை ஆதீனத்திற்கு சொந்தமான பிரசித்திப் பெற்ற சட்டைநாதர் கோவில் உள்ளது. இந்த கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி, யாகசாலை மண்டபம் அமைக்க சமீபத்தில் பூமியில் பள்ளம் தோண்டியிருக்கின்றனர். 

அப்போது பூமிக்கடியில் இருந்து 21 ஐம்பொன் சிலைகள் மற்றும் 462 தேவார திருப்பதிக செப்பேடுகள் அரிய பொக்கிஷமாய் கிடைக்கவே பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் பரவசமடைந்தனர். இந்த சிலைகளின் மதிப்பு சுமார் 1600 கோடி ரூபாய் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. 

தகவல் அறிந்தவுடன் தருமபுர ஆதீனம் வந்து சிலைகளை பார்வையிட்டு நெகிழ்ச்சியடைந்தார். இதுகுறித்து தகவலறிந்து மாவட்ட கலெக்டர் மகாபாரதி மற்றும் இந்து சமய அறநிலையத்துறை, தொல்லியல் துறை என ஒட்டுமொத்த அதிகாரிகளும் வருகை தந்து சிலைகளை ஆய்வு செய்ய தொடங்கிவிட்டனர்.

இதுகுறித்து மாவட்ட கலெக்டர் மகாபாரதி, பூமிக்கடியில் கிடைத்த இந்த சிலைகள் அரசுக்குத்தான் சொந்தம். இதனை நாங்கள் எடுத்துச்சென்று வருவாய்த்துறை பாதுகாப்பில் வைத்துக்கொள்கிறோம்’ என்று தருமபுர ஆதீனம், அவர்களிடம் சொல்ல அதற்கு அவர் மறுத்துள்ளார்

அதற்கு அவர், ‘இது எங்கள் கோவில் வளாகத்திற்குள் கிடைத்திருக்கிறது. எனவே இதனை கோயில் பாதுகாப்பு பெட்டகத்திலே வைத்து பராமரிக்க வேண்டும். பாதுகாப்பு பெட்டக அறை சாவியை வேண்டுமானால் உங்கள் வசம் வைத்துக்கொள்ளுங்கள்’ என்று சொல்ல அந்த இடத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

ஆதீனம் கூறியதை ஏற்றுக்கொண்ட கலெக்டர் சிலைகளை கோயில் பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருக்கிறது. இந்நிலையில் தொல்லியல் துறை அதிகாரிகள் சிலைகளை சென்னைக்கு எடுத்துச்சென்று ஆய்வு செய்ய முடிவு செய்திருப்பதால் இதற்கு ஆன்மிக அன்பர்கள் மற்றும் இந்து அமைப்புகளிடமிருந்து பல கண்டனங்கள் எழுந்துள்ளது.

இதுகுறித்து இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளர் சுவாமிநாதன் கூறுகையில் ‘எந்த காரணத்தைக் கொண்டும் சிலைகளை கோவிலைவிட்டு எடுத்துச்செல்ல அனுமதிக்கமாட்டோம். இங்கேயே ஆய்வு செய்ய வேண்டும். சிலைகள் உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் இங்கேயே அருங்காட்சியகம் அமைத்து காட்சிப்படுத்த வேண்டும். இறைவன் சொத்து இறைவனிடமே இருக்க வேண்டும். சிலைகளை  தொல்லியல் துறையினர் எடுத்துச்செல்ல முற்பட்டால் தமிழகம் தழுவிய போராட்டங்களை இந்து மக்கள் கட்சி நடத்தும்’ என்றார் ஆக்ரோஷமாக.

அகில பாரத இந்து மகா சபா ஆலய பாதுகாப்பு பிரிவு மாநில தலைவர் ராமநிரஞ்சன், ‘தருமபுர ஆதீனத்திற்கு சொந்தமான சிலைகளை தொல்லியல் துறை எடுத்துச்செல்வது நியாயமாக இருக்காது. கண்டெடுக்கப்பட்ட சிலைகள் மற்றும் செப்பேடுகளை ஆதீனத்தின் இடத்திலேயே பாதுகாப்பாக பராமரிக்க முதல்வர் அனுமதிக்க வேண்டும். இதற்கு மாறாக நடந்தால் கடுமையான போராட்டங்களில் ஈடுபடுவோம்” என்றார்.

பா.ஜ.க தேசிய மகளிரணித் தலைவியும், எம்.எல்.ஏ-வுமான வானதி சீனிவாசன், ‘தமிழக ஆன்மீக மரபின் மீது நம்பிக்கை கொண்ட பெரியோர்களுக்கும், ஆன்மீக தலைவர்களுக்கும்  இந்த தொல்லியல் சான்றுகளை திமுக அரசு எப்படி கையாளப்போகிறதோ? என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. எனவே இந்த விஷயத்தில் முதல்வர் தலையிட்டு ஆன்மீக மரபை நன்கு அறிந்த அறிஞர்களைக்கொண்டு ஆய்வு நடத்த உத்தரவிடவேண்டும்” என்றும் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார்.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com