இந்தியாவில் இஸ்லாம் மற்றும் கிறிஸ்துவ மதத்திற்கு மாறிய தலித்துகளுக்கு பட்டியல் சாதியினருக்கான சலுகைகள் மறுக்கப்பட்டு வருகிறது.
கிறிஸ்துவராக மாறிய ஆதி திராவிடர்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக சட்டத்தில் உரிய திருத்தங்களை மேற்கொள்ளுமாறு மத்திய அரசை வலியுறுத்தி தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று சட்டப்பேரவையில் தனித்தீர்மானத்தை முன்மொழிகிறார்.
இந்தியாவில் பட்டியல் சாதிகளைச் சேர்ந்தவர்களுக்கு வேலை மற்றும் கல்வியில் இட ஒதுக்கீடு அளிக்கப்படுகிறது. ஆனால் இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய தலித்துகளுக்கு பட்டியல் சாதியினருக்கான சலுகைகள் மறுக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக சட்டத்திருத்தம் செய்து கிறிஸ்துவராக மாறிய ஆதி திராவிடர்களுக்கும் இட ஒதுக்கீடு வேண்டும் என்பதைதான் இன்று முதலமைச்சர் சட்டப்பேரவையில் முன்மொழிகிறார்.
இந்த முன்மொழிவைத் தொடர்ந்து இந்தத் தீர்மானத்தின் மீது சட்டப்பேரவை உறுப்பினர்கள் தங்களின் கருத்துகளைப் பதிவு செய்வார்கள். அதன் பின்னர் வாக்கெடுப்பு நடத்தி தீர்மானம் நிறைவேற்றப்படும்.
இதுதொடர்பான சட்டப்பேரவை அலுவலகம் வெளியிட்ட அறிவிப்பில், ‘இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் பட்டியலின மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள சட்டரீதியான பாதுகாப்பு, உரிமைகள் மற்றும் இட ஒதுக்கீடு உள்ளிட்ட சலுகைகளை கிறித்துவராக மதம் மாறிய ஆதி திராவிடர்களுக்கும் வழங்க வேண்டும்.
அவர்களும் அனைத்து வகையிலும் சமூக நீதியின் பயன்களைப் பெற அரசியலமைப்புச் சட்டத்தில் உரிய திருத்தங்களை மேற்கொள்ளுமாறு மத்திய அரசை இப்பேரவை ஒருமனதாக வலியுறுத்துகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பட்டியலின மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள சட்டரீதியான பாதுகாப்பும் உரிமைகளும் மதம் மாறிய பிறகும் கிடைக்க இந்த தனித்தீர்மானம் வலியுறுத்துகிறது.