பல்வேறு கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
திருவாரூர் அருகே மர்மமான முறையில் மரணமடைந்த இளைஞரின் உடலை தோண்டியெடுத்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் அருகே பெரம்பூர் ஊராட்சி முல்லைவாசல் மாதா கோவில் தெருவை சேர்ந்தவர்கள் ஆசிர்வாதம் - ரீட்டாமேரி தம்பதி. இவர்களது இளைய மகன் திருமாவளவன்(21) கேரளாவில் டிரைவராகப் பணிபுரிந்து வந்தார்.
இவர் தனது சொந்த ஊரான பெரம்பூருக்குக் கடந்த சனிகிழமை இரவு வந்துள்ளார். மறுநாள் ஞாயிற்றுகிழமை அன்று தனது நண்பர்களைப் பார்க்க சென்ற திருமாவளவன் இரவு வீடு திரும்பாததால் அவரது உறவினர்கள் திருமாவளவனது நெருங்கிய நண்பர்களை அணுகி விவரத்தை தெரிவித்துத் திருமாவளவனை பல்வேறு இடங்களில் தேடி அலைந்தனர்.
இந்நிலையில் திருமாவளவன் குடும்பத்தினர் நீடாமங்கலம் காவல்நிலையத்தில் திருமாவளவனைக் கண்டுபிடித்துத் தருமாறு புகார் அளித்தனர். இத்தகைய சூழலில் திருமாவளவன் வீட்டின் அருகாமையில் மதகு கட்டையில் திருமாவளவன் அணிந்திருந்த காலணியும், அங்கு ரத்தத்கறையும் இருந்ததைக் கண்ட அவரது உறவினர்கள் அதிர்ச்சி அடைந்ததோடு, இதுசம்மந்தமாகக் காவல்நிலையத்தில் தகவல் தெரிவித்தனர்.
இதுசம்மந்தமாகத் தீவிர விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் பல்வேறு இடங்களில் தேடி வந்த நிலையில், எந்தவித துப்பும் கிடைக்காததால் காவல்துறை மோப்ப நாய் ராக்சி வரவழைக்கப்பட்டுத் தேடுதல் வேட்டையில் காவல்துறையினர் இறங்கினர்.
இதிலும் காவல்துறைக்கு எந்தவித துப்பும் கிடைக்காத நிலையில், அப்பகுதியில் உள்ள கோரையாற்றின் நடுவே நாணல் செடி புதர் மண்டியுள்ள அடர்ந்த பகுதியில் தூர்நாற்றம் வீசி வந்ததை அறிந்து பொதுமக்கள் அங்குச் சென்றபோது நாய்கள் தோண்டிக் கொண்டிருந்தன.
இதுகுறித்துப் பொதுமக்கள் காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்க அங்கு வந்த காவல்துறையினர் சம்மந்தப்பட்ட பகுதியினை ஆராய்ந்தபோது 6 அடி ஆழத்தில் திருமாவளவன் கொலை செய்யப்பட்டு அவரது உடலை புதைத்திருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அஸ்வத் ஆண்டோ ஆரோக்கியராஜ் தலைமையிலான காவல்துறையினர் மரணமடைந்த திருமாவளவன் உடலை கைப்பற்றி மன்னார்குடி அரசு தலைமை மாவட்ட மருத்துவமனைக்குப் பிரேத பரிசோதனைக்குக் கொண்டு வந்தனர்.
இதுகுறித்து நீடாமங்கலம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் திருமாவளவனது கொலை முன்விரோதம் காரணமாக நடந்ததா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்ற பல்வேறு கோணத்தில் காவல்துறையினர் புலன் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.