சென்னை: மாற்றுத்திறனாளிக்கு அரசு பேருந்தில் அனுமதி மறுப்பு - நடத்துநர் சஸ்பெண்ட்

சென்னை: மாற்றுத்திறனாளிக்கு அரசு பேருந்தில் அனுமதி மறுப்பு - நடத்துநர் சஸ்பெண்ட்
சென்னை: மாற்றுத்திறனாளிக்கு அரசு பேருந்தில் அனுமதி மறுப்பு - நடத்துநர் சஸ்பெண்ட்

போக்குவரத்துத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

சென்னையில் அரசு பேருந்தில் மாற்றுத்திறனாளி கிரிக்கெட் வீரருக்கு அனுமதி மறுக்கப்பட்ட விவகாரத்தில் நடத்துநர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னையில் இருந்து மதுரைக்கு இந்திய மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் அணியின் கேப்டனும், மதுரையைச் சேர்ந்தவருமான சச்சின் சிவா செவ்வாய்கிழமை (18ம் தேதி) இரவு சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து தமிழ்நாடு அரசிற்குச் சொந்தமான பேருந்தில் பயணிப்பதற்கு ஏறியுள்ளார்.

அப்போது அந்தப் பேருந்தின் நடத்துநர் இந்தப் பஸ்சில் மாற்றுத்திறனாளிகளுக்கு அனுமதி இல்லை எனக் கூறி பஸ்சில் ஏறக்கூடாது என மாற்றுத்திறனாளி வீரரை தடுத்துள்ளார். அப்போது மாற்றுத்திறனாளி வீரர் சச்சின் சிவா ‘இதுபோன்ற பஸ்களில் பயணிக்க அரசு அனுமதி அளித்துள்ளது’ என பதில் அளித்துள்ளார். அதற்கு கோபப்பட்ட நடத்துநர், முகத்தை உடைத்துவிடுவேன். எனக்கு எல்லாம் தெரியும் எனக் கூறி மாற்றுத்திறனாளி வீரரை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.

மேலும், ஏ.சி பஸ்களைத் தவிர மற்ற பேருந்துகளில் செல்ல அனுமதி உள்ளது என மாற்றுத்திறனாளி வீரர் எடுத்துக் கூறியும் கேட்காத நடத்துநர் அலட்சியப்படுத்தியுள்ளார். இதனால் செய்வதறியாது நின்ற மாற்றுத்திறனாளி வீரர் அரசு பஸ்சின் முன்பு உட்கார்ந்து தர்ணாவில் ஈடுபட்டுள்ளார். ஆனாலும் அவரை அப்புறப்படுத்தியுள்ளனர். 

மேலும், ‘நீ மதுரைக்கு வா.. உன்னைப் பார்த்துக்கொள்கிறேன்’ என மிரட்டல் விடுக்கும் தொனியில் நடத்துநர் பேசியுள்ளார். இதன் பின்னர் பேருந்தில் ஏற்றாமல் அப்படியே விட்டுவிட்டு சென்றுள்ளனர். இதையடுத்து வேறு ஒரு பேருந்தில் மிகுந்த சிரமத்துடன் பயணித்ததாக தெரிவித்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி வீரர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தனக்கு நேர்ந்த நிலை குறித்து விளக்கி உள்ளார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இந்திய மாற்றுத்திறனாளி கிரிக்கெட் அணியின் கேப்டனுக்கே இந்த நிலை என்றால் மற்ற மாற்றுத்திறனாளிகள், பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் என்ன மாதிரியான நிலை அரசு பேருந்துகளில் ஏற்படும் எனப் பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கேள்வி எழுப்பி உள்ளனர். இந்தச் சம்பத்தில் உரிய நடவடிக்கையை தமிழ்நாடு அரசு எடுக்க வேண்டும் எனவும் மற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு இதுபோன்ற சம்பவம் நிகழாமல் இருக்க வேண்டும் எனத் தமிழ்நாடு அரசுக்கு சச்சின் சிவா கோரிக்கை விடுத்தார்.

இந்த நிலையில் சென்னை கோயம்பேட்டில் அரசு பேருந்தில் மாற்றுத்திறனாளி வீரரை ஏற்ற மறுத்த நடத்துநர் ராஜா பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மாற்றுத்திறனாளி வீரர் வீடியோ வெளியிட்ட நிலையில் போக்குவரத்துத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com