தனியார் நிதி நிறுவனத்திடம் ரூ.5 கோடி லஞ்சம் வாங்கிய டி.எஸ்.பி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை ஐ.எஃப்.எஸ் நிதி நிறுவனம் அதிக வட்டி தருவதாக மக்களிடம் ஆசை வார்த்தை கூறியதாகவும், அதை நம்பி ஏராளமான மக்கள் 6000 கோடி ரூபாய் வரை முதலீடு செய்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் முதலீட்டாளர்களுக்கு அசல் மற்றும் வட்டி தொகையை ஐ.எஃப்.எஸ் நிறுவனம் திருப்பித் தரவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.
இதுதொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின்பேரில் இந்த நிதி மோசடி தொடர்பாக ஐ.எஃப்.எஸ் நிறுவனத்தின் இயக்குநர்கள் மற்றும் ஊழியர்களின் மீது பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து சிலரை கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டு வந்தனர்.
இதற்கிடையே இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் லட்சுமி நாராயணன் வீட்டில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தி 4 வாகனங்கள் மற்றும் முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர். இந்த சோதனையில் சென்னை பொருளாதார குற்றப்பிரிவு டி.எஸ்.பி கபிலன் மற்றும் அருள் ஆகியோர் தலைமையிலான போலீசார் ஈடுபட்டனர். இந்த நிலையில் இந்த வழக்கில் மேற்கொண்டு நடவடிக்கை எதுவும் இல்லாமல் இருந்தது.
இதுதொடர்பாக துறைரீதியாக நடந்த விசாரணையில் நிதி நிறுவனத்தைச் சேர்ந்தவர்களிடம் டி.எஸ்.பி கபிலன் பேரம் பேசி இருப்பதும் மேலும் நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்காக 5 கோடி ரூபாய் லஞ்சம் வாங்கியதும் தெரியவந்தது.இதையடுத்து சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்தில் அதிரடி ஆய்வு மேற்கொண்ட உயர் அதிகாரிகள் அவர் வீட்டில் இருந்த 5 கோடி ரூபாயை பறிமுதல் செய்தனர். இதனைடுத்து உடனடியாக அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் டி.எஸ்.பி லஞ்சம் பெற்ற விவகாரம் காவல்துறை மற்றும் முதலீட்டாளர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.