கடலூர் மாவட்டம் மங்கலம்பேட்டையில் ‘உங்களுக்கெல்லாம் டீ கொடுக்க முடியாது’ என நரிக்குறவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டை அருகே பள்ளிப்பட்டு கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் சமத்துவபுரம் பகுதியை சேர்ந்தவர் குப்பன் (48). நரிக்குறவர் சமுதாயத்தைச் சேர்ந்த இவர் நேற்று தன்னுடைய பேரன் சித்தார்த் (5) என்ற சிறுவனுடன் மங்கலம்பேட்டையில் உள்ள ஒரு கடைக்கு டீ குடிக்க சென்றுள்ளார்.
சிறிது நேரத்தில் கடையின் மாஸ்டர் கொடுத்த டீயை குப்பன் மற்றும் அவரது பேரன் டீ வாங்கி குடித்துக் கொண்டிருந்துள்ளனர். அப்போது வெளியில் இருந்து வந்த கடையின் உரிமையாளர் அண்ணாதுரை (60) என்பவர் நரிக்குறவர் குப்பன் டீ குடிப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.
பின்னர் அவரது சமுதாயத்தை இழிவாக பேசியதோடு மட்டுமல்லாமல் ‘உங்களுக்கெல்லாம் டீ கொடுக்க முடியாது. எனவே இங்கே டீ குடிக்க நீங்களெல்லாம் வரக்கூடாது’ என கூறி அசிங்கமாக திட்டியதாக கூறப்படுகிறது. அதற்கு குப்பன் ‘ஏன் எங்களுக்கு டீ தர மாட்டீர்கள்?’ என கேட்டதற்கு ஆத்திரமடைந்த அண்ணாதுரை பிளாஸ்டிக் சேரால் குப்பனை தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
இதில் காயமடைந்த குப்பன் கொடுத்த புகாரின்பேரில் மங்கலம்பேட்டை போலீசார் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் அண்ணாதுரை மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், சம்பவம் நடந்த இடத்துக்கு சென்று இதுதொடர்பாக போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
சமீபத்தில் சிம்பு நடிப்பில் வெளியான ‘பத்து தல’ படத்தை பார்க்க நரிக்குறவர் மக்களுக்கு உள்ளே செல்ல அனுமதி மறுக்கப்பட்டதையடுத்து தமிழகம் முழுவதும் நரிக்குறவர்கள் மீதான கவனம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் கடைக்கு டீ குடிக்க வந்த நரிக்குறவரை தாக்கிய உரிமையாளரின் செயலானது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நம் நாட்டில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கான நீதி இன்னமும் மறுக்கப்பட்டு வருவதற்கான சாட்சியமாகவே இது அமைந்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.