வாழை மரத்தில் 100 ரூபாய் மற்றும் 500 ரூபாய் தாள்கள் மறைத்து சுருட்டி வைக்கப்பட்டிருந்ததை போலீசார் கண்டு பிடித்தனர்
கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் நடுப்புனி சோதனை சாவடி அருகே உள்ள வாழை மரத்தில் இருந்து, சோதனைச் சாவடி ஊழியர்கள் பதுக்கிவைத்திருந்த லஞ்சப் பணத்தை, லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடியாகக் கைப்பற்றினர்.
தமிழக - கேரளா எல்லையில் நடுப்புனி சோதனை சாவடி உள்ளது. இந்தச் சோதனைச் சாவடி வழியாக இரு மாநிலங்களுக்கும் தினசரி ஏராளமான கனரக வாகனங்கள் சென்று வருகிறது.
மேலும், கேரளாவில் இருந்து வாகனங்களில் தமிழகத்திற்கு கால்நடைகளை எற்றி வருவதும், அதேபோல, தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு கால்நடைகளைக் கொண்டு செல்வது வழக்கமாக உள்ளது.
இந்த நிலையில், வானங்களை மறித்துச் சோதனைச் சாவடியில் உள்ள பணியில் உள்ள பணியாளர்கள் மற்றும் அதிகாரிகள், கட்டாய லஞ்சம் பெறுவதாக, லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் பேரில், நடுப்புனி சோதனை சாவடியில், லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது, அருகில் உள்ள வாழை மரத்தில், லஞ்சப் பணம் சுருட்டி வைக்கப்பட்டுள்ளதாக வாகன ஓட்டுநர்கள் கூறியதன் பேரில், அருகில் உள்ள வாழை மரங்களை சுற்றிச்சுற்றிச் பார்வையிட்டு சோதனை நடத்தினர்.
அப்போது, வாழை மரத்தில் 100 ரூபாய் மற்றும் 500 ரூபாய் தாள்கள் மறைத்து சுருட்டி வைக்கப்பட்டிருந்ததை கண்டு பிடித்தனர். மேலும், வாழை மரங்களைப் போலீசார் சோதனை செய்து, 8, 900 ரூபாய் கைப்பற்றினர்.
இது தொடர்பாக, லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய விசாரணையில், சோதனை சாவடியைச் சேர்ந்த அலுவலக உதவியாளர் விஜயகுமார், லைப் ஸ்டாக் இன்ஸ்பெக்டர் ஷாஜி மற்றும் கள அலுவலர் அசோகன் ஆகியோர் வாகன ஓட்டிகளிடம் லஞ்சம் பெற்றதாகவும், அந்த லஞ்ச பணத்தினை வாழை மரத்திலும், அலுவலக மேற்கூறையிலும் பதுக்கி வைக்கப்பட்டது தெரியவந்தது. இது குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.