ராகுலுக்கான அலுவலகத்தை பறித்து நடுரோட்டில் நிறுத்த முயற்சி செய்து வருகின்றனர்
'தி.மு.கவினரின் சொத்துப் பட்டியலை வெளியிடும் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, பா.ஜ.க. தலைவர்களின் ஊழல் பட்டியலை வெளியிடத் தயாரா?' என திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் கேள்வி எழுப்பியுள்ளார்.
ராகுல் காந்தியின் எம்.பி பதவியை பறித்ததற்கு கண்டனம் தெரிவித்து, தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில், திருச்சி ரயில்வே ஜங்சன் முன்பாக திருச்சி மாவட்ட மற்றும் மாநகரக் காங்கிரஸ் கமிட்டி சார்பில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
இதில், திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் கலந்து கொண்டார். பின்னர், ரயில் நிலையத்தை முற்றையிட முயன்றனர். அப்போது, காவல்துறையினருக்கும் காங்கிரஸ் தொண்டர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போராட்டத்தில் கலந்து கொண்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
முன்னதாக, செய்தியாளர்களிடம் பேசிய திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர், 'கடந்த சில நாட்களுக்கு முன்னர், ராகுல் காந்தியின் பாராளுமன்ற உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டது. தற்போது, ராகுலுக்கான அலுவலகத்தைப் பறித்து நடுரோட்டில் நிறுத்த முயற்சி செய்து வருகின்றனர்.
ஆனால், சட்ட ரீதியாகவும், நீதிமன்றம் மற்றும் மக்கள் மன்றம் மூலம் நாங்கள் இதனை வெல்வோம். ராகுல் காந்திக்கு பா.ஜ.க. அரசியல் ரீதியாகத் தொடர் அழுத்தம் கொடுத்து வருகிறது. இதற்கெல்லாம் ராகுல் காந்தியோ அல்லது காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்களோ ஒருபோதும் பயப்படப்போவதில்லை.
தி.மு.கவினர் மீது தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை சொத்துபட்டியல் வெளியிட்டுள்ளார். போகிற போக்கில் புழுதி வாரி இறைப்பது போல் புகார் சொல்லக்கூடாது. எதைச் சொன்னாலும் அதை ஆதாரத்துடன் சொல்லவேண்டும். ஆதாரம் இருப்பின் அதை வெளியிட வேண்டும். அதுதான் நல்ல அரசியல்வாதிக்கு அழகு.
தி.மு.கவினரின் சொத்துப் பட்டியலை வெளியிடும் அண்ணாமலை, பி.ஜே.பியில் ஊழல் செய்பவர்களின் பட்டியலையும் வெளியிட்டால் சிறப்பாக இருக்கும். அல்லது குறைந்தபட்சம் பா.ஜ.கவினரின் சொத்துப் பட்டியலையாவது வெளியிடவேண்டும்' என்றார்.