திருச்சி : போலீஸ் வலையில் சிக்கிய 'சிலந்தி வலை' நிருபர்

திருச்சி : போலீஸ் வலையில் சிக்கிய 'சிலந்தி வலை' நிருபர்
திருச்சி  : போலீஸ் வலையில் சிக்கிய 'சிலந்தி வலை' நிருபர்

பிரபின் கிரிஸ்டல் ராஜ் குறிப்பிட்ட மதத்தை சேர்ந்த சிலர் உள்ளதாக கூறப்படுகிறது

தமிழக காவல்துறையின் உயர் அதிகாரிகளுக்கு நெருக்கமானவர் என்று தன்னை சொல்லிக் கொள்ளும் 'சிலந்தி வலை' என்ற இதழின் நிருபர் பிரபின் கிரிஸ்டல் ராஜ். திருச்சியில் ஹோட்டல் அறையில் ரூம் எடுத்து ஒரு சிறுமியுடன் உல்லாசமாக இருக்கும்போது கையும் களவுமாக சிக்கியுள்ளார். அவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

காவல்துறை உயர் அதிகாரிகளுடன் தான் மிக மிக நெருக்கமாக இருக்கும் படங்களை தனது  செல்போனில் காட்டி, பல்வேறு காரியங்களை சாதித்து வருகிறார் 'சிலந்தி வலை' என்ற இதழின் நிருபர் பிரபின். அதுமட்டுமல்ல. திருச்சியில் உள்ள பிரபல ஹோட்டலில் ரூம் போட்டு தவறான செயல்களில் ஈடுபடுகிறார் என்றும், அவ்வாறு செயல்படும் அந்த நபரை காவல்துறையினர் சுற்றி வளைத்தால், உயர் அதிகாரிகள் பெயரைச் சொல்லி மிரட்டி தப்பித்து விடுகிறார்' என்று ஒரு ரகசிய தகவல் திருச்சி மாநகர காவல் துறை ஆணையர் சத்திய பிரியாவுக்கு கிடைத்தது.

வேறு யாரிடமும் இந்த வேலையை ஒப்படைத்தால் அந்த நபர் தப்பி விடுவார் என்பதால், தனது ஸ்பெஷல் டீம் ஆய்வாளர் கருணாகரனிடம் அந்த வேலையை ஒப்படைத்துள்ளார் கமிஷனர் சத்திய பிரியா. 'குறிப்பிட்ட நபர் உங்களிடம் எந்த உயர் அதிகாரியின் பெயரைச் சொன்னாலும் யாருடன் தான் நெருக்கமாக இருக்கும் படத்தை செல்போனில் காட்டினாலும் அதை நம்ப வேண்டாம். தவறு செய்தால் உடனே அரெஸ்ட் பண்ணி ஸ்டேஷனில் உட்கார வைத்துவிட்டு எனக்கு தகவல் சொல்லுங்கள்' என்று உத்தரவிட்டுள்ளார் கமிஷனர் சத்திய பிரியா. 

இந்த நிலையில், திருச்சியில் பேருந்து நிலையம் மிக அருகில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் 301 நம்பர் அறையின் கதவை காவல்துறையினர் தட்டியபோது கதவை திறந்த பிரபின், வழக்கம் போல், அதிகார தோரணையில் பேசியிருக்கிறார்.  'நான் யார் தெரியுமா ? ஐ.ஜிகிட்ட பேசுறீங்களா ? 'என்றெல்லாம் வழக்கம்போல் உதார் விட்டுள்ளார். 

உடனே, அந்த செல்போனை வாங்கி கையில் வைத்துக் கொண்டு, பிரபின், அவருடன் இருந்த பெண் ஒருவர், சிறுமி ஒருவர் என மூவரையும் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார் கருணாகரன்.

இது குறித்து நம்மிடம் பேசிய தனிப்படையைச் சேர்ந்த காவல்துறை அதிகாரி ஒருவர், 'கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த பாக்கியராஜ் மகன் பிரபின் கிரிஸ்டல் ராஜ். இவர் கடந்த சில வருடங்களாக ஒரு தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தில் நிருபராக பணிபுரிந்து வந்துள்ளார். தற்போது 'சிலந்தி வலை' என்ற மாதாந்திர பத்திரிகையில் நிருபராக வேலை செய்து வருகிறார்.

காவல்துறை மட்டுமல்லாது மற்ற அரசு அதிகாரிகளுடன் 'பத்திரிகை நிருபர்' என்கிற வகையில் நெருங்கி, நெருக்கமான உறவை ஏற்படுத்திக் கொள்வது அவரது வாடிக்கை. அவர்களுடன் நெருக்கமாக இருப்பது போல் படங்களை எடுத்து தனது செல்போனில் வைத்துக் கொண்டு, அதைக்காட்டியே பல்வேறு இடங்களில் காரியம் சாதித்து வந்துள்ளார். தமிழகம் முழுவதும் பலரையும் பலவிதமாக ஏமாற்றி வந்திருக்கிறார். இவரது பகட்டை நம்பி பணத்தை இழந்தவர்கள் எண்ணிக்கை ஏராளம். 

உதாரணத்திற்கு, திருச்சி துவாக்குடி பகுதியைச் சேர்ந்த கணவனை இழந்த சந்தியா என்பவரின் மகள்தான் இந்த சிறுமி. 15 வயதாக இருக்கும் போதே பெரம்பலூரை சேர்ந்த பாலமுருகன் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளார் அவரது தாயார் சந்தியா. ஆனால், 2 வருடத்தில் கருத்து வேறுபாடு காரணமாக தாய் வீட்டிற்கு வந்து விட்டார்.

அடுத்து, திருச்சி சுப்ரமணியபுரத்தைச் சேர்ந்த முத்து என்பவரது மனைவி ரமீஜா பானுவிடம் அந்த 17 வயது சிறுமியை வேலைக்கு என்று சொல்லி அனுப்பி வைத்தார் அவரது தாயார் சந்தியா. ஆனால், சிறுமியை ஏமாற்றி கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி உள்ளார் ரமீஜா பானு. ஒரு நாளைக்கு 10 நபர்கள் வரை இந்த சிறுமியை சிதைத்து இருக்கிறார்கள். இந்த தகவல் எல்லாம் எங்கள் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக மேலும் விசாரணை நடத்தி வருகிறோம் என்றார்.  

இந்த நிலையில், கண்டோமெண்ட் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், போக்சோ மற்றும் விபச்சார தடுப்பு, குழந்தை திருமணம் தடுப்புச் சட்டம் ஆகிய பிரிவுகளின் அடிப்படையில், பிரபின் கிரிஸ்டல் ராஜ், ரமீஜா பானு மற்றும்  சந்தியா ஆகிய மூன்று பேர் மீதும் வழக்குப் பதிவு செய்து கைது செய்து சிறைக்கு அனுப்பினர்.

பிரபின் கிரிஸ்டல் ராஜ் கைது செய்தபோதும் சரி, அல்லது அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போதும் சரி பத்திரிகையாளர்கள் யாரும் படமோ அல்லது வீடியோவோ எடுத்துவிடக்கூடாது என்பதில்  காவல்துறையில் ஒரு தரப்பினர் மிகவும்  கவனமாக இருந்தனர். இதற்குப் பின்னணியில் பிரபின் கிரிஸ்டல் ராஜ் சார்ந்த குறிப்பிட்ட மதத்தை சேர்ந்த சிலர் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து உளவுத்துறையினர் விசாரணையில் முக்கிய அதிகாரிகள் சிலர் சிக்கியுள்ளதாக  தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com