குட்கா வழக்கில் ஏற்கனவே குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது
குட்கா வழக்கில் தமிழக முன்னாள் டி.ஜி.பி. ராஜேந்திரன் மற்றும் முன்னாள் காவல்துறை கமிஷனர் ஜார்ஜை விசாரிக்க மத்திய அரசு அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.
கடந்த அ.தி.மு.க. ஆட்சியில், தமிழகத்தில் புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்யவும், குட்கா, பான்பராக் போன்ற போதை வஸ்துகளைக் கிடங்குகளில் வைக்கவும், விற்பனை செய்யவும் தடை விதிக்கப்பட்டது.
தமிழக அரசின் தடையை மீறி அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து, குட்கா, பான்பராக் போன்ற போதை வஸ்துகள் விற்கப்படுவதாகவும், இதனால் வரி ஏய்ப்பு நடைபெறுவதாகவும் புகார் எழுந்தது.
அதன் பேரில், கடந்த 2017ம் ஆண்டு ஜூலை மாதம் 8ம் தேதி, வருமானவரித் துறையினர் சென்னை, செங்குன்றத்தில் உள்ள மாதவ ராவ் பங்குதாரராக உள்ள குட்கா கிடங்கில் அதிரடி சோதனை நடத்தினர். இதில், குட்கா விற்பனை செய்வதற்கு லஞ்சம் வாங்கிய முக்கியப் பிரமுகர்கள் மற்றும் அரசு அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள் குறித்த ரகசிய ஆவணங்கள் கிடைத்தது.
அதில், சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் டி.ஜி.பி. டி.கே. ராஜேந்திரன், ஓய்வுபெற்ற காவல்துறை கமிஷனர் எஸ்.ஜார்ஜ் உள்ளிட்ட காவல்துறையைச் சேர்ந்த 23 அதிகாரிகளின் பெயர்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், இந்த விவகாரத்தில், கலால் வரித்துறை அதிகாரிகள், மத்திய உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் உள்ளிட்டோரும் லஞ்சம் பெற்றது தெரிய வந்தது.
இது தொடர்பாக, தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர். பின்னர், இந்த வழக்குச் சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்பட்டது. அதன்படி, கடந்த 2017ம் ஆண்டு ஜூன் மாதம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கினர். முதல் கட்டமாகச் சென்னையில் உணவு மற்றும் பாதுகாப்புத் துறையைச் சேர்ந்த அதிகாரிகளிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
இதனைத் தொடர்ந்து, 2018ம் ஆண்டு தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் டி.ஜி.பி. ராஜேந்திரன் வீடு, முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா வீடு, முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் வீடு என மொத்தம் 40 இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.இது தொடர்பாக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இந்த நிலையில், இந்த வழக்கில் முன்னாள் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் மீதும் சென்னை காவல்துறை முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் மீதும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த மத்திய அரசு அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.