இரு கிராமத்திலும் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
அம்பேத்கர் பாடல் இசைக்கப்பட்டதால் இரண்டு கிராமத்தினருக்கிடையே தகராறு ஏற்பட்டு மோதிக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இரு கிராமத்திலும் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் அடுத்த சின்ன தாசரப்பள்ளி கிராமத்தில் நேற்று திருவிழாவையொட்டி பாடல் கச்சேரி நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது.அப்போது அம்பேத்கர் பாடல் இசைத்தபோது அருகே உள்ள அட்டூர் கிராம பட்டியலின இளைஞர்கள் பணம் கொடுக்க முயன்றதற்காக தகராறு ஏற்ப்பட்டுள்ளது
அட்டூர் கிராம இளைஞர்கள் வீடு திரும்பிய நிலையில், சின்ன தாசரப்பள்ளி கிராம இளைஞர் ரவி என்பவர் அட்டூர் அருகே வாகனத்தில் விழுந்து காயமடைந்ததை பட்டியலின இளைஞர்கள் தாக்கியதாக தகவல் பரவியதால் சின்ன தாசரப்பள்ளி, பெரிய தாசரப்பள்ளி ஆகிய இரு கிராம இளைஞர்கள் பட்டியலினத்தவர்கள் வசிக்கும் அட்டூர் கிராமத்திற்குள் 200க்கும் அதிகமானோர் நள்ளிரவில் படையெடுத்து ஊரின் முன்பகுதியில் சாமியான அமைத்து வைக்கப்பட்டிருந்த அம்பேத்கர் படத்தை கிழித்ததுடன் வீட்டின் ஜன்னல் கண்ணாடி, 2 கார் கண்ணாடிகளை கற்கள் வீசி உடைத்து அங்கிருந்த பெண்களையும் தாக்கியதாக கூறப்படுகிறது.
மேலும், அட்டூர் கிராமத்திற்கு விநியோகிக்கப்படும் குடிநீர் மேல்நிலை தொட்டியின் பைப்களும் உடைக்கப்பட்டிருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அசம்பாவிதங்களை தவிர்க்க இரு கிராமங்களிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இச்சம்பவம் இரு கிராம மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.